சென்னை - புறநகர் பகுதிகளைத் தாக்கக் காத்திருக்கும் அடுத்த சுற்று மழை

நவம்பர் 10 - 11ஆம் தேதி அடுத்த சுற்று காத்திருப்பதாக வானிலை முன்னெச்சரிக்கைத் தெரிவிக்கிறது.
சென்னை - புறநகர் பகுதிகளைத் தாக்கக் காத்திருக்கும் அடுத்த சுற்று மழை
சென்னை - புறநகர் பகுதிகளைத் தாக்கக் காத்திருக்கும் அடுத்த சுற்று மழை


சென்னை: சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், நவம்பர் 10 - 11ஆம் தேதி அடுத்த சுற்று காத்திருப்பதாக வானிலை முன்னெச்சரிக்கைத் தெரிவிக்கிறது.

இதனால், சென்னை மீண்டுமொரு வெள்ள பாதிப்பை சந்திக்கத் தயாராக வேண்டும் என்றும் கருதப்படுகிறது. இதற்கான சிவப்பு எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டுவிட்டது. 

நிலத்தடி நீர்மட்ட பட்டியல், நீர்நிலைகள், ஏரிகளின் நீர்மட்ட நிலவரங்கள் போன்றவை, அடுத்து கனமழை பெய்தால், நகரமே ஸ்தம்பிக்கும் நிலையை எடுத்துரைக்கின்றன.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்தகாற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து, நவம்பர் 11ஆம் தேதி வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை பொது இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் கூறுகையில், வானிலை நிலவரங்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார்.

சர்வதேச வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு வானிலை ஆய்வு மையத் தகவல்களும், இந்த வாரத்தில் நவம்பர் 10ஆம் தேதிக்குப் பிறகு சென்னையில் கடுமையான மழை பாதிப்பு ஏற்படும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. நன்கு அறியப்படும் ஸ்கைமேட் வெதரைச் சேர்ந்த மகேஷ் பலாவத் கூறுகையில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேலும் தீவிரமடைந்து புயல் சின்னமாக மாறி, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இரவு, சென்னையில் சுமார் 21 செ.மீ. மழைப் பொழிவு ஏற்பட்டது. இது 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு, 24 மணி நேரத்தில் பெய்த இரண்டாவது உயர்ந்தபட்ச மழையளவாகும். 

சமூக வலைத்தளங்களில் மழை நிலவரம் குறித்து பதிவிட்டு வரும் பிரதீப் ஜான், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, சென்னை முதல் கடலூர் வரை மேகக் கூட்டங்கள் குவிந்துள்ளன. எனவே, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தார்.

நமக்குக் கிடைத்த தகவலின்படி, வானிலையை ஆய்வு செய்யும் மிகச் சிறப்பான ரேடார் கருவிகள் பயன்பாட்டில் இல்லாததே, கனமழை குறித்த முன்னறிவிப்புகளை இழந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் தொலைத்தொடர்பு பக்கத்தில், சென்னையின் ரேடார் தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாக தற்போது சேவைசெய்ய இயலாத நிலையில் அணைத்துவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது.

தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தில் நிறுவப்பட்டிருக்கும் ரேடாரை சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அந்த ரேடார் தற்போது வரை அளவுகளில் திருத்தம் செய்யவும் மற்றும் பரிசோதனையிலும்தான் உள்ளது.

பருவமழை தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசு, வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியது. ஆனால், அப்போது, விரைவில் ரேடார் பிரச்னை சரி செய்யப்படும் என்றும், தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் ரேடார் பயன்பாட்டில் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் எம். மஹோபாத்ரா பதிலளித்திருந்தார். இந்த விவகாரத்தில் எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்வதற்கு அரசு தயாராக இருப்பதாகவும் அப்போது உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளத்தில் மழை நிலவரங்களை பதிவிட்டு வரும் ஸ்ரீகாந்த் இதுபற்றி கூறுகையில், உடனடி வானிலை நிலவரங்களை அறிய ரேடார் மிகச் சிறந்த வழி. திடீரென உருவாகும் மேகக் கூட்டங்களை வானிலை முன்தரவுகள் அவ்வளவு துல்லியமாகக் கணிக்கவியலாது. அதுபோலவே, சனிக்கிழமையன்று கனமழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகளை வானிலை முன்தரவுகள் எடுத்துரைத்தாலும், இந்த அளவுக்குத் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்பதை முன்கணிக்க இயலாமல் போனது. மேலடுக்கு சுழற்சியானது, வடக்கு தமிழகம் - தெற்கு  ஆந்திரப் பகுதிகளில் உருவாகி, திடீரென மேகக் கூட்டங்கள் குவிந்து, சனிக்கிழமை இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழையை ஏற்படுத்தின என்றார்.
 

ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பாலச்சந்திரன் கூறுகையில், மிகக் குறுகிய நேரத்தில் உருவாகும் மேகக்கூட்டத்தால் ஏற்படும் கனமழைப் பொழிவை முன்கணிப்பது அவ்வளவு எளிதல்ல என்றார். இப்போதிருக்கும் வானிலை முன்தரவுகளின் அடிப்படையில்தான் வானிலை முன்னறிவுப்புகளை வழங்குகிறோம், உள்பகுதிகளில் ஏற்படும் சூழல் மாறுபாடுகளால் உருவாகும் வானிலை மாற்றம் குறித்து முன்னறிவிப்பு செய்ய இயலாது.  நுங்கம்பாக்கத்தில் சனிக்கிழமை 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆனால், 20 கி.மீ. தொலைவிலிருக்கும் மீனம்பாக்கத்தில் வெறும் 11 செ.மீ. மழைதான் பதிவாகியிருந்தது. இதற்குக் காரணம், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் இதரக் காரணிகளுக்கும், வானிலை முன்தரவுகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுதான். இதனை முன்கணிப்பது கடினம் என்று விளக்கம் அளித்தார்.

சரி.. நவம்பர் 10ஆம் தேதி எங்கெல்லாம் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்று பார்க்கலாம்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்காலிலும் நவம்பர் 10ஆம் தேதி மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com