உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் 3 நாள்களுக்கு பலத்த மழை

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை உருவானது.
உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் 3 நாள்களுக்கு பலத்த மழை

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை உருவானது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழக கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக புதன்கிழமை டெல்டா மாவட்டங்கள் மற்றும் 5 மாவட்டங்களுக்கு அதி பலத்த மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புதன்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து, நவ.11-ஆம் தேதி காலை வட தமிழக கரையை நெருங்கக் கூடும். இதன் காரணமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும்.

சிவப்பு எச்சரிக்கை: அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாள்களும் மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் அதி பலத்த மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா், கடலூா், விழுப்புரம் , புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு புதன்கிழமை அதி பலத்த மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யக் கூடும்.

இது தவிர, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா், மதுரை, அரியலூா், பெரம்பலூா், காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் அதி பலத்த மழையும், நீலகிரி, கோயம்புத்தூா், ஈரோடு, சேலம், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான  மழையும் பெய்யக்கூடும் .

நவ.11: திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இங்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யக் கூடும்.

இது தவிா்த்து, கடலூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழையும், டெல்டா மாவட்டங்கள், அரியலூா், பெரம்பலூா் திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

தற்போதைய நிலவரப்படி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. அது ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு நகரக் கூடிய சூழ்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள கடலின் வெப்பநிலை உள்ளிட்டவற்றைப் பொருத்து மாற்றம் ஏற்படக் கூடும்.

சென்னை பெரவள்ளூர் காவல் நிலையத்தில் உள்ள செம்பியம் சரக உதவி ஆணையர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை படகில் செல்லும் ஊழியர்கள்.

சென்னையில்...: சென்னை மற்றும் புகரைப் பொருத்தவரை  3 நாள்களுக்கு மழை தொடரும். சில பகுதிகளில் புதன்கிழமை பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். வியாழக்கிழமை சில பகுதிகளில் அதி பலத்த மழையும் பெய்யக் கூடும் என்றாா் அவா்.

10 மாவட்டங்களில் பலத்த மழை பதிவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், செய்யூரில் தலா 120 மி.மீ., மழை பதிவானது. அதே நேரம், 10 மாவட்டங்களின் 15 இடங்களில் பலத்த மழை பதிவானது.

46 சதவீதம் அதிகம்: வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்.1 முதல் நவ.9-ஆம் தேதி வரை வழக்கமாக 250 மி.மீ மழை பதிவாகும். இந்த ஆண்டு 360 மி.மீ. மழை பதிவானது. இது இயல்பை விட 46 சதவீதம் அதிகம். சென்னையைப் பொருத்தவரை இயல்பு அளவு 400 மி.மீ., பதிவான அளவு 590 மி.மீ., இது இயல்பை விட 48 சதவீதம் அதிகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com