திடீரென க‌ற்பாறைகள் விழுந்ததால் கண்ணூர்-யஷ்வந்த்பூர் விரைவு ரயில் மலைப்பாதையில் தடம் புரண்டது

தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டி மலைப்பாதையில் கற்கள் பெயர்ந்து விழுந்ததால் கண்ணூர்-யஷ்வந்த்பூர் விரைவு ரயில் தடம் புரண்டது.
தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே தடம் புரண்ட நிற்கும் கண்ணூர் விரைவு ரயில்.
தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே தடம் புரண்ட நிற்கும் கண்ணூர் விரைவு ரயில்.

பெங்களூரு: கண்ணூரில் இருந்து பெங்களூரு நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் மீது பெரிய கற்பாறைகள் விழுந்ததால், ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 7 பெட்டிகள் சேதமடைந்துள்ளன. 

கேரளம் மாநிலம் கண்ணூரில் இருந்து நவ.11-ஆம் தேதி மாலை 6.05 மணிக்கு ரயில் எண்-07390-கண்ணூர்-பெங்களூரு விரைவு ரயில் பெங்களூருக்கு புறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை பெங்களூரு-சேலம் தடத்தில் தொப்பூர்-சிவடி இடையிலான காட்டுப்பகுதியில் ரயில் வந்துகொண்டிருந்தபோது திடீரென மலையில் இருந்து கற்பாறைகள் ரயில் மீது மோதியுள்ளன. இதில் ரயில் தடம்புரண்டுள்ளது. 

இதையும் படிக்க | நிலநடுக்கத்தை துல்லியமாக அறிய சென்னை ஐஐடி.யில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

இந்த சம்பவத்தில் பி1, பி2(குளிர்சாதன வசதி), எஸ்6, எஸ்7, எஸ்8, எஸ்9, எஸ்10(படுக்கை வசதி) ஆகிய 7 பெட்டிகள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல்  பயணிகள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெங்களூரு கோட்ட ரயில்வே மேலாளர் ஷியாம்சிங் தலைமையிலான மூத்த அதிகாரிகள், மருத்துவர்கள் கொண்ட குழுவினர், விபத்து நிவாரண ரயில் மற்றும் மருத்துவக் கருவி பெட்டியுடன் சம்பவ இடத்திற்கு காலை 4.45 மணிக்கு சென்றுள்ளனர். 

அதேபோல, சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையிலான குழுவினரும் காலை 5.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து ஆய்வு நடத்திய அதிகாரிகள், ரயிலில் மொத்தம் இருந்த 2348 பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

விபத்தில் சிக்கிய  கண்ணூர்-யஷ்வந்த்பூர் விரைவு ரயில் 

விபத்து நடந்த இடத்தில் இருந்து 5 பேருந்துகளில் பயணிகள் தொப்பூருக்கு அழைத்துசெல்லப்பட்டனர். அங்கிருந்து 15 பேருந்துகளில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பயணிகளுக்கு சிற்றுண்டி, குடிநீர் வசதிகளும் செய்து தந்ததாக பெங்களூரு கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பயணிகளை தொடர்புகொள்ள தொலைபேசி உதவிமையம் தொடங்கப்பட்டுள்ளன. உதவி மையங்களை அணுக: பெங்களூரு-080-22156554, ஒசூர்-04344-222603, தருமபுரி-04342-232111. 

விபத்தில் சேதம் அடையாத 6 பெட்டிகள் தொப்பூருக்கு கொண்டுச் செல்லப்பட்டு, சேலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் தடத்தில் இருந்து கற்பாறைகள் அகற்றப்பட்டு, ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 

இதனிடையே, சில மணி நேரம் இந்த தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com