மதுரையில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு கோரி சுங்கச்சாவடி முற்றுகை: போக்குவரத்து பாதிப்பு 

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு கோரி வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்.
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்.


மதுரை: உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு கோரி வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் மதுரை,கன்னியாகுமரி, விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. 

திருமங்கலம் நகருக்கு மிக அருகாமையில் இருப்பதாலும் ராஜபாளையம் செல்லும் வழியில் நான்கு வழிச்சாலை இல்லாத நிலையில் அதற்கு கட்டண விலக்கு கோரியும் திருமங்கலம் தொகுதி மக்கள் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து வந்தனர். 

இதையடுத்து நீண்ட நாள்களாக உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க சாவடி நிர்வாகம் கட்டண விலக்கு அளித்து இருந்தது. 

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போலீசார் மற்றும் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அனிதா.

இந்த நிலையில் சுங்கச்சாவடியை புதிதாக ஏலம் எடுத்த நிறுவனம் உள்ளூர் வாகனங்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி கட்டண வசூலில் ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதன் எதிரொலியாக கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம், கள்ளிக்குடி,கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .

அதன் அடிப்படையில் திருமங்கலம் கப்பலூர் பகுதி மக்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டது.அதே சமயத்தில் கல்லுப்பட்டி, பேரையூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு தொடர்ந்து வசூல் செய்யும் பணியில் சுங்கச்சாவடி ஊழியர்கள் செயல்பட்டனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி வாகன ஓட்டிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கப்பலூரில் உள்ள சுங்கச் சாவடியை சனிக்கிழமை காலை முற்றுகையிட்டனர். 

சுங்கச் சாவடியில் உள்ள 10 வழிகளிலும் வாகனங்களை நிறுத்தி வைத்து அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9:30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் தொடர்ந்து 12 மணி வரை நடைபெற்றது. 

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தலைமையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இரண்டு வழிகள் மட்டும் திறந்து விடப்பட்டு விருதுநகரில் இருந்து வரும் வாகனங்கள் மதுரைக்கும், மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் விருதுநகர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாரிகள் தற்காலிகமாக இந்த பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். 

சுங்கச்சாவடியில் ஏதாவது பிரச்னை ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் தெரிவித்து ஓட்டுநர் இலவசமாக கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் என தெரிவித்தனர். 

ஒரு வாரத்திற்குள் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண விடை பெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com