தமிழக அரசின் மலிவு விலை சிமெண்ட்டான 'வலிமையை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிமெண்ட் விலை, ஒரு மூட்டைக்கு ரூ.360 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெளி சந்தைகளில் சிமெண்ட் விலை அதிகரித்து காணப்படும் நிலையில், கட்டுமானத் துறை சந்தையில் மலிவு விலை சிமெண்ட்டை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
கடந்த சில நாள்களாக சிம்ண்ட் விலை தமிழகத்தில் அதிகரித்து வந்தது. இதனைக் கட்டுப்படுத்த கடந்த அக்டோபர் மாதம் தொழில் துறை அமைச்சர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடபெற்றது.
இதில், தமிழக அரசு சார்பில் மலிவு விலையில் சிமெண்ட் வெளியாகும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வலிமை சிமெண்ட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் இந்த சிமெண்ட் பிரீமியம், சுப்பீரியர் என இரண்டு தரத்தில் தயாரிக்கப்படுகிறது.
3 ஆலைகளில் உற்பத்தி:
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ஆலங்குளம்
சிமெண்ட் ஆலை, ஆண்டொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி
திறனுடன், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் 1970 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தால், அரியலூரில்
ஆண்டொன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன் ஒரு
ஆலையும், 10 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய
சிமெண்ட் ஆலையும் நிறுவப்பட்டது.
இந்த மூன்று ஆலைகளின் மொத்த
உற்பத்தித் திறன் ஆண்டொன்றுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் அரசு என்ற பெயரில் சிமெண்டை விற்பனை
செய்து வந்தது.
'வலிமை' சிமெண்ட்:
2021-22ஆம் ஆண்டு தொழில் துறை மானியக் கோரிக்கையின் போது,
“வலிமை” என்ற பெயரில் ஒரு புதிய ரக சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும்
என்று தொழில் துறை அமைச்சர் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர சிமெண்ட்டான 'வலிமை' இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சிமெண்ட் அதிக உறுதியும் (Greater Compression Strength), விரைவான உலரும் தன்மையும் (Quick Setting), அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் (Heat Resistant) கொண்டது.
நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் மேஷ்ராம், மற்றும் அரசு உயர்
அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.