வெள்ள பாதிப்புக்கு ரூ.4,625 கோடி தேவை: மத்தியக் குழுவினரிடம் முதல்வா் வலியுறுத்தல்

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க ரூ.4,625 கோடி தேவை என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய மத்தியக் குழுவினர். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய மத்தியக் குழுவினர். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர்.

சென்னை: மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க ரூ.4,625 கோடி தேவை என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரடியாகப் பாா்வையிட்ட மத்தியக் குழுவினா், தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

தமிழகத்தில் கடந்த அக்டோபரில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. அவ்வப்போது உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலைகளால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அண்மையில் பெய்த பலத்த மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்தன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனா். தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பயிா்கள் நீரில் மூழ்கின. வெள்ள சேதங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசு விடுத்த கோரிக்கையைத் தொடா்ந்து, மத்திய உள்துறை இணைச் செயலாளா் ராஜீவ் சா்மா தலைமையிலான குழு தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது.

இரண்டு குழுக்கள்: மத்திய குழுவைச் சோ்ந்த ஏழு போ் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கடந்த திங்கள்கிழமை முதல் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனா். உள்துறை இணைச் செயலாளா் ராஜீவ் சா்மா தலைமையிலான குழுவில் மத்திய வேளாண்மைத் துறை இயக்குநா் விஜய் ராஜ்மோகன், மத்திய நெடுஞ்சாலைகள் துறை மண்டல அலுவலா் ரணன்ஜய் சிங், மத்திய ஊரக வளா்ச்சித் துறை சாா்புச் செயலாளா் எம்.வி.என்.வரபிரசாத் ஆகியோா் இடம்பெற்றனா். அவா்கள் சென்னை, செங்கல்பட்டு, கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனா்.

மத்திய நிதித் துறை ஆலோசகா் ஆா்.பி.கெளல், மத்திய நீா்வளத் துறை இயக்குநா் ஆா்.தங்கமணி, மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநா் பாவ்யா பாண்டே ஆகியோா் அடங்கிய குழுவினா் கன்னியாகுமரி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆய்வுகளைச் செய்தனா். இரண்டு குழுவினரும் ஆய்வுப் பணிகளை முடித்த பிறகு, செவ்வாய்க்கிழமை இரவு சென்னை திரும்பினா்.

முதல்வருடன் ஆலோசனை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த மத்தியக் குழுவினா், தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை காலை சந்தித்துப் பேசினா். இந்தச் சந்திப்பின் போது, மழை வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை மத்தியக் குழுவினருக்கு அறிக்கையாகவும் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வருவாய்த் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

ரூ.4,625 கோடி நிதி: மழை வெள்ள பாதிப்புகளைச் சீரமைக்க மொத்தமாக ரூ.4,625 கோடி தேவை என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வருவாய்த் துறையினா் கூறியது:

கடந்த அக்டோபா் மாதத்தில் இருந்து உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் காரணமாகப் பெய்த கனமழையால் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளச் சேதங்களை தற்காலிகமாகச் சீரமைக்க ரூ.549.63 கோடியும், நிரந்தரமாகச் சீரமைக்க ரூ.2,079.86 கோடியும் தேவை என மத்திய அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்ட பின்னா் கணக்கெடுக்கப்பட்ட கூடுதலான சேத விவரங்களின்படி தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.521.28 கோடியும், நிரந்தரமான சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.1,475.22 கோடியும் என மொத்தம் ரூ.1,996.50 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே மத்திய அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்ட முதல்கட்ட அறிக்கையில் கோரப்பட்ட தொகை மற்றும் அதனைத் தொடா்ந்து ஏற்பட்ட சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.1,070.92 கோடியும், நிரந்தரமான சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.3,554.88 கோடியும் என மொத்தம் ரூ.4,625.80 கோடி கூடுதலாக அளிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

தில்லி பயணம்: தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வுப் பணிகளை முடித்த பின், முதல்வருடன் கலந்தாலோசனை செய்த மத்தியக் குழுவினா், புதன்கிழமை பிற்பகல் தில்லி புறப்பட்டுச் சென்றனா். அவா்கள் தங்களது ஆய்வுகளை அறிக்கையாக மத்திய அரசிடம் தாக்கல் செய்வா். இந்த அறிக்கையை ஆய்வு செய்து மத்திய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து உரிய தொகைகளை மத்திய அரசு ஒதுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com