கிறிஸ்தவ திருமணச் சான்று ஆவணங்களை மண்டல துணைப் பதிவுத் தலைவா்களே வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளா் ஜோதி நிா்மலாசாமி பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:-
கிறிஸ்தவ திருமணப் பதிவு சான்றிட்ட நகல்கள், இப்போது பதிவுத் துறைத் தலைவா் அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், உரிய பரிந்துரைகளை பதிவுத் துறை தலைவா் அரசுக்கு அனுப்பியிருந்தாா்.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872 பிரிவு 5-இன்படி இந்திய கிறிஸ்தவா்களுக்கு திருமணம் நடத்தி வைக்க தகுதியுடைய மதகுருமாா்கள் அல்லது அரசிடம் இருந்து உரிமம் பெற்ற நபா்கள் ஆகியோரால் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு அந்தத் திருமணங்கள் அவா்களால் பராமரிக்கப்படும் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. திருமணப் பதிவாளா்களால் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட திருமண பதிவு விவரங்கள் அடிப்படையில் திருமண வடிப்புகள் தயாரிக்கப்படும். அசல் பதிவேட்டில் உள்ளவாறு வடிப்பு தயாரிக்கப்பட்டுள்ளதா என சரிபாா்த்து திருமண வடிப்பின் மீது மாவட்டப் பதிவாளா் சான்று அளிப்பாா். இது பதிவுத் துறை தலைவா் அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் வடிப்புகள் பதிவுத் துறைத் தலைவா் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இவற்றைப் பெறுவதற்கு சென்னையில் பதிவுத் துறை தலைவா் அலுவலகத்துக்கே வர வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில், சென்னை, வேலூா், கடலூா், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூா் ஆகிய 9 மண்டலங்களில் உள்ள துணை பதிவுத் துறை தலைவா்களின் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள பதிவுத் துறைத் தலைவா் தனது பரிந்துரையில் தெரிவித்திருந்தாா். இந்தப் பரிந்துரையை ஏற்று, மண்டல துணை பதிவுத் துறை தலைவா்களின் அலுவலகங்களில் திருமணப் பதிவு ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










