எந்தத் தடுப்பூசி சிறந்தது? இன்னும் இருக்கிறதா இந்த சந்தேகம்? 

அச்சத்தோடு தடுப்பூசி போடாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களுக்கு எந்த தடுப்பூசி போடுவது சிறந்தது என்ற கேள்வி இன்னமும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.
எந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்? இன்னும் இருக்கிறதா இந்த சந்தேகம்?
எந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்? இன்னும் இருக்கிறதா இந்த சந்தேகம்?


கரோனா ஒன்று, இரண்டு என பேரலைகளைக் கடந்து, நாட்டில் மூன்றாவது அலை தாக்கக் கூடுமோ என்ற அச்சத்தோடு தடுப்பூசி போடாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களுக்கு எந்தத் தடுப்பூசி போடுவது சிறந்தது என்ற கேள்வி இன்னமும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.

கோவிஷீல்டு போட்டால் கடுமையான காய்ச்சல் வருகிறதாமே? கோவாக்ஸின் போட்டால் வெளிநாட்டுக்கெல்லாம் போக முடியாதாமே? கோவிஷீல்டை விட கோவாக்ஸின்தான் நன்றாக இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறதாமே? என்று இன்னமும் நாம் கையை கன்னத்தில் வைத்துக் கொண்டு மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூனியம் என்றுதான் சொல்லலாம் என்கிறது மருத்துவ உலகம்.

கோவிஷீல்டு போடலாமா? கோவாக்ஸின் போடலாமா? என்று மருத்துவர்களிடம் கேட்டால், அவர்களிடமிருந்து பளீச்சென்று ஒரு பதில் வருகிறது. அதாவது எந்த ஒரு தடுப்பூசியுமே போடாமல் இருப்பதைவிடவும், ஏதேனும் ஒரு தடுப்பூசியை செலுத்திக் கொள்வது சாலச் சிறந்தது என்கிறார்கள் நெற்றிப்பொட்டில் அடித்தபடி.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், கோவிஷீல்டை விடவும், கோவாக்ஸின் உருமாறிய கரோனா வைரஸ்களை எதிர்த்து சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகின்றன. என்றபோதிலும், இதுபோன்ற ஆய்வுகள் மிகக் குறைவுதான்.

பல்வேறு நாடுகளில் கோவிஷீல்டுக்கு அனுமதி கொடுத்திருப்பதால், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வோர் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்கிறார் சக்ரா உலக மருத்துவமனை டாக்டர் சுப்ரதா தாஸ். "கரோனா தடுப்பூசிகள் அனைத்தும் வெவ்வேறு வகையில் செயல்படுகிறது, ஆனால் அதன் இலக்கு ஒன்றுதான், கரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவது. அவை, கரோனா தொற்றின் ஒரு பகுதியாக இருக்கலாம், அல்லது செயலிழக்கவைக்கப்பட்ட வைரஸாக இருக்கலாம், வைரஸின் ஆர்என்ஏவாக மற்றும் இதர முறைகளில் இருக்கலாம். ஃபைசர் மருந்தை -15 டிசிரி முதல் -18 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் பாதுகாக்க வேண்டும். அது இந்தியாவில் மிகவும் சிரமம். ரஷ்யாவில் நடந்த ஆய்வுகளில் ஸ்புட்னிக் மருந்து 90 சதவீதம் பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

மேலும், ரத்தக் கட்டு, இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்னை உள்ளவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை தவிர்த்துவிட்டு பிற தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு, உடலில் ஏற்பட்டிருக்கும் நோய் எதிர்ப்பாற்றலை பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், சில தடுப்பூசிகள், உடலிலிருக்கும் டி-செல்களின் நோய் எதிர்ப்பாற்றலை (வைரஸை அடையாளம் கண்டு அழிக்கும் ஆற்றல்) சிறப்பாக தூண்டிவிடும். உருமாறிய கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. இது குறித்து உலக அளவில் உறுதியான தரவுகள் ஏதுமில்லை, அதற்கு இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்கிறார் டாக்டர் தாஸ்.

"அடிப்படையில் கரோனா தடுப்பூசிகள் செயல்படும் திறனில் பெரிய அளவில் எந்த மாற்றமும் தென்படவில்லை. நோயின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, கரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணையும் செலுத்தியவர்கள் பலியாவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது நிச்சயம் குறைகிறது. ஒருவர் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், நுரையீரலில் பாதிப்பு, ஆக்ஸிஜன் அளவு குறைவதும் போன்றை ஏற்படுகிறது" என்று மணிப்பால் மருத்துவமனை டாக்டர் அனூப் அமர்நாத் கூறுகிறார்.

கரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளின்போது தடுப்பூசிகள் பரிசோதனையில் இருந்தன. தற்போது உருமாறிய கரோனாவுக்கு எதிரான ஆற்றல் குறித்து ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அதிக தரவுகள் இல்லை, கரோனா தடுப்பூசிகள் ஒன்றுபோலத்தான் செயல்படுகின்றன. அதன் சேர்மானங்களில்தான் மாறுபாடுகள் காணப்படும் என்கிறார் டாக்டர் அமர்நாத்.

கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் குறித்த அடிப்படை ஆய்வுகள், இரண்டுமே, லேசானது முதல் மோசமான நோய்த் தொற்றை அதாவது 65 சதவீதம் முதல் 80 சதவீத நோய் பாதிப்பை எதிர்க்கின்றன. ஆனால், அவற்றின் ஆற்றல் எத்தனை காலத்தில் குறைகிறது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் வெளியாகவில்லை என்கிறார் தனியார் மருத்துவமனை டாக்டர் ரவீந்திர மேத்தா. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com