அதிகரித்து வரும் தமிழக பக்தர்கள் மீதான தாக்குதல்: திருப்பதியில் 15 பேர் கைது

திருப்பதியில் நேரடி இலவச சர்வதரிசன டோக்கன்கள் பெற வந்த தமிழக பக்தர்கள் 15 பேரை தேவஸ்தானம் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு இலவச தரிசனத்திற்கான அனுமதி கிடைத்ததால் திரண்டு வந்து போராடிய தமிழக பக்தர்கள்.
திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு இலவச தரிசனத்திற்கான அனுமதி கிடைத்ததால் திரண்டு வந்து போராடிய தமிழக பக்தர்கள்.

திருப்பதி: திருப்பதியில் நேரடி இலவச சர்வதரிசன டோக்கன்கள் பெற வந்த தமிழக பக்தர்கள் 15 பேரை தேவஸ்தானம் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதியில் உள்ள சீனிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதியில் தேவஸ்தானம் தினசரி 8 ஆயிரம் இலவச சர்வதரிசன டோக்கன்களை அளித்து வருகிறது. பல மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் ஓரிடத்தில் கூடுவதால் கரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதிய தேவஸ்தானம் செப்.25 ஆம் தேதி முதல் இலவச சர்வ தரிசன டோக்கன்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, செப்.26 ஆம் தேதி முதல் திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்படும் என்று ஓர் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எவ்விதமான அறிவிப்பும் இன்றி இலவச தரிசன டோக்கன்களை அளித்த திருமலை தேவஸ்தான அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ள தமிழக பெண் பக்தர்கள்.

இந்நிலையில், செப்.23 ஆம் தேதி வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைக்கான இலவச தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள சீனிவாசத்தில் அளித்து விட்டது. 

இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பையும் தேவஸ்தானம் வெளியிடவில்லை. மேலும் தேவஸ்தான மக்கள் தொடர்பு துறையும் எவ்வித தகவல்களை அளிக்கவும் முன்வரவில்லை.

திருமலையில் சாலைமறியலில் ஈடுபட்ட தமிழக பக்தர்கள்.

பல நாள்களுக்கு பிறகு இலவச தரிசனத்திற்கு அனுமதி கிடைத்ததால் பக்தர்கள் திரண்டு வர தொடங்கினர். இதை அறியாத பக்தர்கள் வெள்ளிக்கிழமை காலை திருப்பதியில் உள்ள சீனிவாசத்தில் இலவச தரிசன டோக்கன்கள் பெற ஒன்று கூடினர். அப்போது ஊழியர்கள் டோக்கன்கள் ஏற்கெனவே அளிக்கப்பட்டுவிட்டதாக கூறி பக்தர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் தேவஸ்தானம் மேற்கொள்ளும் அதிரடி முடிவுகளால் வெகுவாக பாதிக்கப்பட்ட பக்தர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதை ஊழியர்கள் கண்டுகொள்ளாததால், அரியலூரை சேர்ந்த பக்தர்கள் 15 பேர் சீனிவாசம் முன்பு திருமலைக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆயிரக்கணக்கான பகத்ர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திருமலை தேவஸ்தான அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ள தமிழக பக்தர்கள்.

ஆனால் இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், அவர்கள் வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பக்தர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

ஆண்டுதோறும் திருமலைக்கு 75 சதவீதத்திற்கு மேலாக தமிழக பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான எவ்வித வசதிகளையும் தேவஸ்தானம் அளிப்பதில்லை. 

மேலும் இதுபோல் முன்னறிவிப்பு இல்லாமல் தேவஸ்தானம் மேற்கொள்ளும் முடிவால் தமிழக பக்தர்கள் மட்டுமே அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால் பக்தர்கள் பலர் கோவிந்த மாலை அணிந்து பாதயாத்திரையாக பக்தர்கள் பலர் திருமலையை நோக்கி பயணப்படுகின்றனர். 

சாலைமறியலில் ஈடுபட்ட பக்தர்களை கைது செய்து அழைத்து செல்லும் காவல்துறையினர்.

தற்போது இலவச தரிசன டோக்கன்கள் அளிக்கப்படுவதால், பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளாமல் திருமலை பயணத்தை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு தேவஸ்தானம் மேற்கொள்ளும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கையால மனவருத்தம் ஏற்படுவதுடன் பக்தர்களுடன் சுமூகமாக உரையாடி அவர்களை சமாதானப்படுத்துவதுடன் அவர்கள் மீது புகார் அளித்து அவர்களை கைது செய்யும் தேவஸ்தானத்தின் செய்கை தமிழக பக்தர்கள் மீதான வெறுப்பை காட்டுகிறது. 

தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 6 பேர் தமிழக பக்தர்களுக்கு ஏற்படுத்தபடும் அநீதியை தட்டி கேட்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com