விருத்தாசலத்தில் கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை: 13 பேர் குற்றவாளிகள்

விருத்தாசலத்தில் காதல் திருமணம் செய்த கண்ணகி - முருகேசன் தம்பதிகள் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலத்தில் கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை:  13 பேர் குற்றவாளிகள்
விருத்தாசலத்தில் கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை: 13 பேர் குற்றவாளிகள்

விருத்தாசலத்தில் குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த முருகேசன் - கண்ணகி இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் திருமணம் செய்த நிலையில், கொலை செய்யப்பட்டனர்.

இது குறித்து விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த சிலையில், கடலூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளிகள் யார் யார்?
மூக்கு, காது வழியாக விஷத்தை ஊற்றி 2 பேரையும் கொன்று, உடலை எரித்ததாக தொடரப்பட்ட ஆணவக் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் செல்லமுத்து, துணை ஆய்வாளர் தமிழ்மாறன், கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் உள்பட 13 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

வழக்கின் பின்னணி என்ன?
விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் (25). தலித் சமுதாயத்தைச்சேர்ந்த இவர், பி.இ. (கெமிக்கல்) பட்டதாரியாவார். இவர் அதேப் பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி(22) என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர். எனினும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர், ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவரம் தெரியவந்தது. எனவே, முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8-ஆம் தேதி முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர். பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர்.

சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் துறையினரிடம் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்காததோடு, சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டனராம். இதனையடுத்து சில நாள்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானது. அதன்பின்னர் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அதில் முருகேசன், கண்ணகி ஆகியோர் சாதி மாறி திருமணம் செய்ததால் அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பிலிருந்தும் தலா 4 பேரை கைது செய்தனர்.

ஆனால் இந்தக் கொலைகள் சாதி ஆணவத்தில் நடத்தப்பட்டது என்றும், எனவே, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு 2004-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்தது.

இந்த வழக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com