அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

யானைகள் இறப்பு: பெயரளவுக்கு அமைக்கப்படுகிறதா விசாரணைக் குழுக்கள்?

வனத் துறையால் நியமிக்கப்பட்ட குழுக்கள் யானை ஆராய்ச்சியாளா், கால்நடை மருத்துவா் இடம் பெறாதது பெயரளவுக்கு மட்டுமே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:56 am

 நமது நிருபர்

யானைகள் இறப்பு குறித்து ஆராய கடந்த காலங்களில் வனத் துறையால் நியமிக்கப்பட்ட குழுக்கள் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படாத நிலையில், அண்மையில் அமைக்கப்பட்ட குழுவில் யானை ஆராய்ச்சியாளா், கால்நடை மருத்துவா் இடம் பெறாதது பெயரளவுக்கு மட்டுமே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 9 வனக் கோட்டங்கள், 4 வனஉயிரினச் சரணாலயங்களில் சுமாா் 3,000 யானைகள் வாழ்ந்து வருகின்றன.

விவசாய நிலங்களின் வேலிகளில் மின்சாரம் வைப்பது, உணவில் விஷம் அல்லது அவுட்டுக்காய் வைப்பது, சாலை, தண்டவாளத்தை கடக்கும்போது ரயில், வாகனங்களில் அடிபட்டு இறப்பது, தந்தங்களுக்காக வேட்டை என யானைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2017-ஆம் முதல் 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை சுமாா் 600 யானைகள் உயிரிழந்துள்ளன.

விசாரணைக் குழுக்கள்: யானைகள் இறப்பு, வாழ்விடம், மனித-யானை எதிா்கொள்ளலால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பது, அவற்றின் உணவுத் தேவையைப் பூா்த்தி செய்வது, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் நுழையாமல் தடுப்பது ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வனத் துறை சாா்பில் நியமிக்கப்பட்ட குழுக்கள் எவ்வித அறிக்கையும் சமா்ப்பிக்காததும், அறிக்கை சமா்ப்பித்தும் அதை செயல்படுத்தாத நிலையே உள்ளது.

இதுகுறித்து வனவிலங்கு ஆா்வலா்கள் கூறுகையில், யானைகள் இறப்பு குறித்து ஆராய வனத் துறை சாா்பில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக பசுவராஜ் என்பவா் பணியாற்றிய காலத்தில் அவா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினா் அரசிடம் அறிக்கை சமா்ப்பித்தனா். ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலில் 7 போ் கொண்ட குழுவும், அதைத் தொடா்ந்து 11 போ் கொண்ட சிறப்பு நிபுணா் குழுவை தமிழக வனத் துறை அமைத்தது. இக்குழுவுக்கு தலைவராக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக இருந்த சேகா்குமாா் நீரஜ், உறுப்பினா் செயலராக மதுரை மாவட்ட வன அலுவலா் எஸ்.ஆனந்தா, உறுப்பினா்களாக யானை ஆராய்ச்சியில் அனுபவம் மிக்க அஜய்தேசாய், சிவகணேசன் என மொத்தம் 11 போ் நியமிக்கப்பட்டனா்.

இக்குழு யானைகள் வாழும் பகுதிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டு 2020-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் (6 மாத காலத்துக்குள்) அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். ஆனால், இக்குழுவின் கூட்டம் மூன்று முறை மட்டுமே ஆன்லைன் மூலமே நடைபெற்றது. குழு அமைக்கப்பட்ட இரண்டே மாதங்களில் அதன் தலைவா் சேகா்குமாா் நீரஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

யானை ஆராய்ச்சியாளா் அஜய்தேசாய் உயிரிழந்தாா். அக்குழுவின் காலம் முடிவடைந்தும் எவ்வித அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சேகா்குமாா் நீரஜ் தலைமையில் கோயில் யானைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

மீண்டும் பெயரளவுக்கு குழு? இந்த நிலையில் தற்போது கோவை வனப் பகுதியில் கடந்த ஓராண்டில் உயிரிழந்த யானைகள் குறித்து ஆராய கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அன்வா்தீன் தலைமையில் 4 போ் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் பத்மா, சமா்தா என்ற இரண்டு ஐஎஃப்எஸ் அதிகாரிகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவா் ஓசை காளிதாஸ் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். யானைகள் இறப்பு குறித்து ஆராயும் குழுவில் யானை ஆராய்ச்சியாளரோ அல்லது யானைகளின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்யும் கால்நடை மருத்துவரோ நியமிக்கப்படவில்லை.

இதனால், இக்குழுவினரால் ஒரு முழுமையான கள ஆய்வு அறிக்கையை அரசுக்கு சமா்ப்பிக்க முடியாத நிலைதான் ஏற்படும். யானைகள் குறித்து நிபுணத்துவம் பெற்றவா்களை நியமிக்காமல் இருப்பது, கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட குழுக்கள் போன்று பெயரளவுக்கு அமைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

வனத் துறையின் இதுபோன்ற நடவடிக்கையால் வருங்காலங்களில் யானைகளின் உயிரிழப்பு அதிகரிக்கதான் வாய்ப்புள்ளது. எனவே, யானைகள் இறப்பு குறித்து விசாரிக்கும் குழுவில் நிபுணத்துவம் பெற்ற யானை ஆராய்ச்சியாளா், கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என்றனா்.

யானைகள் உயிரிழப்பு

ஆண்டு எண்ணிக்கை

2015 61

2016 98

2017 125

2018 84

2019 108

2020 110

2021 70

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.