அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருக்குறள் ஓவியக் கண்காட்சி தொடக்கம்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குறளோவியம் என்ற திருக்குறள் ஓவியக் கண்காட்சியை இன்று அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருக்குறள் ஓவியக் கண்காட்சி தொடக்கம்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருக்குறள் ஓவியக் கண்காட்சி தொடக்கம்
Published on
Updated on
2 min read

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குறளோவியம் என்ற திருக்குறள் ஓவியக் கண்காட்சியை இன்று அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் இணையக் கல்விக் கழகம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் திருக்குறள் குறளோவியப் போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களின் படைப்பாற்றலைச் சிறப்பிக்கும் வகையில் செம்மையாக வரையப்பட்ட ஓவியங்களைப் பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கண்காட்சியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் ஐ. லியோனி, மேலாண்மை இயக்குநர் முனைவர் து. மணிகண்டன், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறளை இளைய தலைமுறையினரிடத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம், “தீராக்காதல் திருக்குறள்” என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனச் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற, குறளோவியம் என்ற தலைப்பில் மாநில அளவிலான ஓவியப் போட்டியினைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தியது.

இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 12 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட திருக்குறள் கருத்துகளை மையப்படுத்திய சிறப்பான‌ 365 ஓவியங்களைத் தெரிவு செய்து, திருக்குறள் மேசை நாட்காட்டிப் புத்தகத்தைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்நாட்காட்டிப் புத்தகத்தை எல்லா ஆண்டுகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில், ஆங்கிலத் தேதி மட்டும் இடம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பொதுமக்களும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திருக்குறள் குறளோவியப் போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களின் படைப்பாற்றலைச் சிறப்பிக்கும் வகையில் செம்மையாக வரையப்பட்ட ஓவியங்களைப் பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

“தீராக்காதல் திருக்குறள்” என்ற திட்டத்தின் கீழ் ஓவியர், பேச்சாளர், திரைப்பட நடிகர் எனப் பன்முகத் திறமைக் கொண்டவரும், வாழ்வியல் கருத்துகளையும், அறநெறிக் கருத்துகளையும் மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் தன் பேச்சாற்றல் மூலம் பரப்பி வரும் நடிகர் சிவகுமார் திருக்குறளை மையமாகக் கொண்டு எழுதிய “திருக்குறள்-50” என்ற நூலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் பெற்றுக் கொண்டார்.

மேலும், திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெறும் சென்னையைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பரிசுத் தொகை, சான்றிதழ்கள் அமைச்சர்களால் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com