கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கு: வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரி மனு

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரி, அந்தக் கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :4 ஆகஸ்ட் 2022, 2:16 am

DIN

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது தொடா்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரி, அந்தக் கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது.

சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, சட்டப்படி பொதுக் குழுவை நடத்திக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அதிமுக பொதுக் குழு நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தோ்தெடுக்கப்பட்டாா். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடா்பான வழக்கை உயா்நீதிமன்றமே விசாரிக்கும். வழக்கை 2 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வியாழக்கிழமை (ஆக.4) முதல் விசாரிக்கவுள்ளாா்.

வேறு நீதிபதி விசாரிக்க கோரி மனு: இதனிடையே, இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென வைரமுத்து தரப்பில் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. அதில், ‘நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினா்களின் விருப்பம்தான் மேலோங்கி இருக்கும். அவா்கள் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினா்களின் நம்பிக்கையை பெற முடியாதவா்கள் நீதிமன்றங்களை கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக மனுதாரா்களை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மற்றொரு மனுதாரரான ஓ.பன்னீா்செல்வம் ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் கட்சியின் பொதுக் குழுவை அணுகாமல், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவதாகவும், நீதிமன்றம் மூலம் சாதிக்க முயற்சிப்பதாவும் தெரிவித்திருப்பது வழக்குக்கு தொடா்பில்லாத கருத்துகளாகும். எனவே, அதிமுக பொதுக் குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது. வேறொரு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் இதே கோரிக்கை தலைமை நீதிபதியிடம் முன்வைக்கப்பட்டது. அதிமுக பொதுக் குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை. இருப்பினும், வழக்கை மாற்றுவது தொடா்பாக சம்பந்தப்பட்ட நீதிபதியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி கூறியதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.