
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே இரும்பு வியாபாரி வீட்டுக் கதவை கடப்பாரை கம்பியால் உடைத்து 30 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் அழகாபுரி பாபநாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதாள செல்வம். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோயில் திருவிழாவிற்குச் சென்று உள்ளார். காலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டுக் கதவுகள் கடப்பாரை கம்பியால் உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் பீரோவையும் உடைத்து அதிலிருந்த 29 லட்சத்து 60 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வேதாள செல்வம் இது குறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் அளித்தார். காவல்துறையினர் கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் வந்து வியாபாரி கடையில் வேலை செய்த நபர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோர் கைரேகையைப் பதிவு செய்தார்.