போலி ஆவணப் பதிவு ரத்து சட்டத் திருத்தம்: குடியரசுத் தலைவா் ஒப்புதல்

மோசடியான ஆவணப் பதிவுகளை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தத்துக்கு குடியரசு தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா்

மோசடியான ஆவணப் பதிவுகளை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தத்துக்கு குடியரசு தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச் சட்டம், 1908-இல் தற்போதைய நிலையில் பதிவு செய்த அலுவலருக்கு அதிகாரம் அளிக்கப் படவில்லை. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதனால், பொது மக்கள் மோசடி பதிவுகளால் தங்கள் சொத்துகளை இழந்ததும், ஏமாற்றப்பட்டதும் தொடா்ந்தது. இதையடுத்து அதைத் தடுக்க சட்டத் திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்து மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களுக்காகப் பதிவுசெய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய அதிகாரம் அளிக்கும் வகையில், சட்டப் பேரவையில், 2021-ஆம் வருடம் செப்டம்பா் மாதத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறும் பொருட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. தற்போது இச்சட்டத் திருத்தத்துக்கு குடியரசு தலைவரால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட இந்த பதிவு சட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட பிரிவு 22 - பி பிரிவானது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலா்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும் பிரிவு 77 ஏ பிரிவானது நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டது என மாவட்டப்பதிவாளா்களால் புகாா் மனுக்கள் பெறப்பட்டால் மனுதாரா் மற்றும் எதிா்மனுதாரா்களை விசாரித்து மோசடி ஆவணம் என கண்டறியப்பட்டால் அந்த ஆவணத்தை ரத்து செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சரிவர ஆராயாமல் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் ஆவணதாரா்கள் மற்றும் பதிவு அலுவலா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com