வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் உற்பத்தி சிறப்பு வகை தொழில் பிரிவில் சேர்க்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் உற்பத்தி சிறப்பு வகை தொழில் பிரிவில் சேர்க்கப்பட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக முதலீட்டு மானியம் வழங்கப்படும்
வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் உற்பத்தி சிறப்பு வகை தொழில் பிரிவில் சேர்க்கப்படும்: முதல்வர் அறிவிப்பு


திருப்பூர்:  வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் உற்பத்தி சிறப்பு வகை தொழில் பிரிவில் சேர்க்கப்பட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" என்ற மண்டல மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் குறு,  சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் அருண் ராய் வரவேற்புரையாற்றினார்.

இந்த மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.167.58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

விடுதலைப் போராட்ட காலத்திலும், திராவிட இயக்க வரலாற்றிலும் திருப்பூருக்கு பல்வேறு சிறப்புக்கள் உண்டு. இந்த முக்கியத்துவம் பெற்ற இந்த நகரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மண்டல மாநாடு நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில்தான் திருப்பூர் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்த மாநகராட்சியை உருவாக்கித் தருவதற்காக சட்டப்பேரவையில் அறிவித்ததுடன் மட்டுமல்லாமல், திருப்பூருக்கே நேரடியாக வருகை தந்து அப்போதைய முதல்வர் கருணாநிதி மாநகராட்சியைத் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக நானும் பங்கேற்றிருந்தேன். 

அப்போது இந்த வட்டாரத்தில் இருக்கும் மக்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் தனி மாவட்டமாக உருவாக்கித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த மேடையிலேயே திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் கருணாநிதி அறிவித்தார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட திருப்பூர் தற்போது பல சிறப்புக்களைப் பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறது.

நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி:
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஒன்றே கால் ஆண்டுக்குள் நான்காவது 4 முறையாக இங்கு வந்துள்ளேன். இன்னும் வருவேன், வந்து கொண்டிருப்போன் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. வந்தாரை வாழவைக்கும் நகரமாக திருப்பூர் விளங்கிக் கொண்டிருக்கிறது. 

இந்தியாவின் பின்னலாடையின் தலைநகரமாக இருப்பது இந்த திருப்பூர். திருப்பூர் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது பின்னலாடைதான். தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல், தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் உள்ளது. நேற்றைய தொழிலாளி - இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி - நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருத்தமான சொற்களாக உள்ளது. திருப்பூரில் இப்போது தொழிலதிபர்களாக உள்ள பெரும்பாலானோர் தொழிலாளர்களாக இருந்து வந்தவர்கள்தான் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

பல்வேறு தொழில்களில் முன்னணியில் உள்ளது:
திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு பின்னலாடை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், 50 சதவீத பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 57,900 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 8 லட்சம் பேரில் பெரும்பாலானவர்கள் பெண்கள். திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மட்டுமின்றி காங்கயம், தாராபுரம் பகுதிகளில் அரிசி ஆலைகள், வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் சமையல் எண்ணெய், ஊத்துக்குளியில் நெய், காங்கயம், தாராபுரம், உடுமலையைச் சார்ந்த பகுதிகளில் கயிறு மற்றும் கயிறு சார்ந்த பொருள்கள், திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதிகளில் அட்டைப்பெட்டி, விசைத்தறி மற்றும் தானியங்கி விசைத்தறி, திருமுருகன்பூண்டி மற்றும் அவிநாசி பகுதிகளில் கற்சிற்பம் மற்றும் வெட்கிரைண்டர் அரவை கற்கள், பல்லடம் மற்றும் உடுமலை பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகள் மற்றும் கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு தொழில்களில் இந்த நகரம் முன்னணியில் உள்ளது. திருப்பூர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மையமாக உள்ளதைப் போலவே மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது ஆசையாகும்.

சிறு, குறு தொழில்களின் மீது தனி கவனம்:
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளரும் போது சிறு தொழில் முனைவோர் உருவாகிறார்கள். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இலட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வு செழிக்கத் தொடங்குகிறது. பெருந்தொழில்களை மட்டும் நம்பி இருக்காமல் குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் ஊக்கமடைய வேண்டும். அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதில், வேளாண்மை துறைக்கு அடுத்தபடியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முக்கிய பங்காற்றுகிறது. அதனால் தான் இதில் நாம் தனிக்கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

“தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற முழக்கத்துடன் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முக்கிய தேவைகளுக்கு உதவிகள் செய்து வருகிறோம். இத்தகைய தொழில்கள் சென்னையை அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மையப்படுத்தி மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும் என்பதன் அடிப்படையில் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இத்தகைய முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறோம்.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்கள்:
கடந்த 15 மாதத்தில் தமிழக அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகளின் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலமாக 2 லட்சத்து 20 ஆயிரத்து 727 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்ததுடன், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதில், 1,300 கோடி முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 49 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இதில் அடங்கும். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் 1,522 கோடி முதலீடு செய்து உற்பத்தியைத் தொடங்கி 1,909 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று தொழில் முனைவோர்களையும், தொழிலதிபர்களும் சந்தித்து தேவைகளை அறிந்து திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம்.

வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் உற்பத்திக்கு மானியம்: 
இந்த மாநாட்டில் கூட முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் (ஹோம் டெக்ஸ்டைல்ஸ்) ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 50 சதவீதம் அளவுக்கு ரூ.4 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்த வகைப் பொருள்கள் தயாரிப்பை சிறப்பு வகைத் தொழில்கள் பிரிவில் சேர்த்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் முதலீட்டு மானியம் வழங்க கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டு சிறப்பு வகைத் தொழில்கள் பிரிவில் வீட்டு உபயோக ஜவுளி பொருள்கள் உற்பத்தி சேர்க்கப்பட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் கீழ் முதலீட்டு மானியம் வழங்கப்படும். இதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களம் பயனடைவார்கள் என்றார். 

இந்த மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மக்களவை உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் எஸ்.வீனீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com