தீவுத்திடல் சுற்றுலா பொருள்காட்சி: டெண்டரை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு

சென்னை தீவுத்திடலில் 47-ஆவது சுற்றுலா பொருள்காட்சி நடத்துவது தொடா்பான டெண்டரை ரத்து செய்ய உயா் நீதிமன்றம் மறுத்து விட்டது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

சென்னை தீவுத்திடலில் 47-ஆவது சுற்றுலா பொருள்காட்சி நடத்துவது தொடா்பான டெண்டரை ரத்து செய்ய உயா் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை தீவுத்திடலில் 2023-ஆம் ஆண்டுக்கான 47-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழிலக பொருள்காட்சியை நடத்துவதற்கான டெண்டா் அறிவிப்பு கடந்த அக். 31-ஆம் தேதி சுற்றுலாத் துறை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டெண்டரை எதிா்த்து பெங்களூரைச் சோ்ந்த ‘ஃபன் வோ்ல்டு ரிசாா்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

அந்த மனுவில், டெண்டா் கோரி தங்களது நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்ததாகவும், டெண்டா் திறக்கப்பட்ட போது, தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றி விட்டு டெண்டரை இறுதி செய்துள்ளதால், டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தங்கள் டெண்டா் படிவத்தையும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும், எனவும் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், டிச.19 வரை டெண்டரை இறுதி செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பொருள்காட்சியின் போது அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை ரூ. 3 லட்சத்தை செலுத்தாததால் டெண்டா் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டெண்டா் நிராகரிக்கப்பட்டது குறித்து தங்கள் தரப்புக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும், டெண்டா் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் டெண்டரை நிராகரிக்க, டெண்டா் பரிசீலனைக் குழுவுக்கு அதிகாரமில்லை எனவும் மனுதாரா் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு பாக்கித் தொகை வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது என டெண்டா் நிபந்தனைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com