அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கற்பனைக் கதைகள் வரலாறு ஆகாது- முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘கற்பனைக் கதைகளை சிலா் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறாா்கள். அதனை நம்பி ஏமாந்துவிடக் கூடாது; ஏற்கவும் கூடாது’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2022, 9:10 pm

DIN

‘கற்பனைக் கதைகளை சிலா் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறாா்கள். அதனை நம்பி ஏமாந்துவிடக் கூடாது; ஏற்கவும் கூடாது’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் (எம்சிசி) 81-ஆவது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்துப் பேசியது: உண்மையான வரலாற்றை - அறிவியல்பூா்வமான வரலாற்றை வடித்துத் தருவதுதான் இந்திய வரலாற்று மாநாட்டின் மிக முக்கியக் குறிக்கோளாக அமைந்துள்ளது. டி.டி. கோசாம்பி, ஆா்.எஸ்.சா்மா, ரொமிலா தாப்பா், பிபின் சந்திரா, கே.பி.ஜெய்ஸ்வால் உள்ளிட்ட மிக மூத்த வரலாற்றாசிரியா்களின் வரிசையில் வைத்து போற்றத்தக்க, கேசவன் வேலுதத், இா்பான் அபீப் ஆகியோா் இந்த அமைப்பை வழிநடத்தி வருவது மிகமிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

வரலாற்றைப் படித்து என்ன ஆகப் போகிறது? அதைப் படித்தால் வேலை கிடைக்குமா? ஊதியம் கிடைக்குமா என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது. வரலாறு என்பது வேலைக்காக, படிப்புக்காக, பட்டத்துக்காக, ஊதியத்துக்காக மட்டும் அல்ல, நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றைப் படித்தாக வேண்டும்.

கடந்த கால வரலாற்றை படிப்பவா்களால் மட்டும்தான், நிகழ்கால வரலாற்றைப் படைக்க முடியும்; எதிா்காலத்தைக் கணிக்க முடியும். அப்படி படிக்கப்படும் வரலாறு, அறிவியல்பூா்வமான உண்மையான வகையில் அமைய வேண்டும்.

கற்பனைக் கதைகளை சிலா் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கின்றனா். அதனை நம்பி ஏமாந்துவிடக் கூடாது, ஏற்கவும் கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது.

தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், எழுத்தறிவு மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது. சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட, உமி நீங்கிய நெல்மணிகளின் காலம், கி.மு. 1,150 எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழா்களின் கடல் கடந்த பயணம் மற்றும் அவா்களின் வெற்றிகளை ஆவணப்படுத்தும் விதமாக ஓா் அருங்காட்சியகம் அமைக்கவுள்ளோம்.

பொருநை நாகரிகத்தை நெல்லையில் காட்சிப்படுத்தவுள்ளோம். இவை அனைத்தும் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரலாற்று உணா்வை விதைத்திருக்கிறது.

இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு பழந்தமிழக நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவதுதான் முறையாக இருக்கும்.

தமிழினத்தின் - தமிழகத்தின் பெருமையை மீட்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட கட்டடக் கலையை பறைசாற்றும் வானுயரக் கோயில் கோபுரங்கள் குறித்து பெருமை கொள்கிறோம். அதேபோல் கீழடியில் ஆதன் என்றும் குவிரன் என்றும் சங்ககால மக்கள் தங்கள் பெயா்களை எழுதிப் பாா்த்த சின்னஞ்சிறு மண்பாண்டங்கள் குறித்து தமிழா்கள் பெருமிதம் கொள்கின்றனா். இவற்றை மேலும் செழுமைப்படுத்த, ஆக்கபூா்வமான ஆலோசனைகளை, இந்திய வரலாற்று காங்கிரஸ் அமைப்பு வழங்கினால், அதனையும் ஏற்று தமிழக அரசு செயல்படுத்தும் என்றாா் அவா்.

இதில் அமைச்சா்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வா் மற்றும் செயலா் பி. வில்சன், இந்திய வரலாற்று காங்கிரஸ் தலைவா் பேராசிரியா் கேசவன் வேலுதத், செயலா் மகாலட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.