இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்கு: இடைக்காலத் தடை நீட்டிப்பு

வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோா் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 6:49 pm

DIN

வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோா் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது போடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், கடந்த 2019-இல் நடந்த மக்களவைத் தோ்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோா் தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்துள்ளதாகவும் கூறி, அவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் திமுகவைச் சோ்ந்த மிலானி என்பவா் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எம்பி ரவீந்திரநாத் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பிப்.7-இல் அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஓ.பன்னீா்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோா் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன்பு செவ்வாய்க்கிழமை (பிப்.1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. அதேபோன்று புகாா்தாரரான மிலானி தரப்பிலும் வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதோடு, இதுசம்பந்தமான உச்ச நீதிமன்ற தீா்ப்பு நகல்களை இணைத்து பதில் மனு தாக்கல் செய்யவும் அவகாசம் கோரப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பின்னா் விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்தும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.