5 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி: முல்லைப் பெரியாறு மறு ஆய்வுக்கு பரிந்துரை

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேற்பார்வைக் குழுவும், மத்திய நீர்வள ஆணையமும் அறிக்கை சமர்ப்பித்திருப்பது தமிழகத்தின் 5 மாவட்ட
5 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி: முல்லைப் பெரியாறு மறு ஆய்வுக்கு பரிந்துரை

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேற்பார்வைக் குழுவும், மத்திய நீர்வள ஆணையமும் அறிக்கை சமர்ப்பித்திருப்பது தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் இடையூறு: தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணை பலவீனமாக உள்ளது என்றும், புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியும், பல்வேறு நபர்கள் மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும் வருகிறது. இதுதொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதிர்ச்சியில் 5 மாவட்ட விவசாயிகள்: முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் 2010 இல் உத்தரவிட்டு, ஆய்வுக் குழுவை அமைத்தது. ஆய்வுக் குழுவினரும் 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் அணையை முழுமையாக ஆய்வு செய்து பலமாக உள்ளது என்று அறிக்கையும் சமர்ப்பித்து வந்தனர்.

இதற்கிடையில், கடந்த 2021 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கேரளத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் உபரிநீர் கேரளப் பகுதியில் திறக்கப்பட்டது. முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் மதகுகளைத் திறந்துவிட்டதாகவும், இதனால், அணையின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து உள்ளதாகவும் கேரள அரசு குற்றம்சாட்டியது.

மத்திய குழு அறிக்கை: இந்நிலையில், அணையின் உறுதித்தன்மை தொடர்பான வழக்கில் மத்திய நீர்வள ஆணையமும், அணையின் மேற்பார்வைக் குழுவும் தற்போதைய நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அண்மையில் சமர்ப்பித்தன. அதில், அணையின் உறுதித்தன்மை பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தன.

விரைவில் போராட்டம்: இதுபற்றி பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் கூறியது: உச்சநீதிமன்றம் பல்வேறு நிபுணர் குழுக்கள் மூலம் ஆய்வு செய்து, அணையின் உறுதித்தன்மையை உறுதி செய்த நிலையில், இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக உள்ளது. மேலும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும், கேரள அரசின் பொய்ப் பிரசாரத்துக்கு வாய்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்திய நீர்வள ஆணையமும், மேற்பார்வைக் குழுவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையின் பின்னணியில், கேரள அரசியல்வாதிகள் இருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், அணையின் பாதுகாப்பு குறித்து கேரளத்தின் கேள்விகளுக்கெல்லாம் முறையாகப் பதில் சொல்லி வந்த மத்திய நீர்வள ஆணையம், திடீரென அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியிருப்பது வியப்பாக உள்ளது.

இனி கேரளம் முழுவதும் மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கையை முன்னிறுத்தி போராட்டங்கள் நடக்கக் கூடும். அந்த மாநில அரசும், அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கும் மத்திய நீர்வள ஆணையத்தையும்,  மேற்பார்வைக் குழுவையும் கண்டித்து விரைவில் 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.

பேபி அணையைப் பலப்படுத்த கோரிக்கை: ஒருங்கிணைந்த 5  மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் கூறியது: முல்லைப் பெரியாற்றின் பிரதான அணை உறுதியாக இருக்கும் நிலையில், 

பேபி அணையைப்  பலப்படுத்துவதற்கு தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து அனுமதி கேட்டு வருகின்றனர்.

கட்டுமான தளவாடப் பொருள்கள் கொண்டுசெல்லும் தரைவழிப் பாதையான வல்லக்கடவு பாதை இன்றளவும் சரிசெய்யப்படவில்லை. அங்கு மரங்களை வெட்ட அனுமதி கொடுத்த கேரள வனத் துறை அதிகாரியை மிரட்டும் வகையில் அவரை கேரள அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் அணை உடையப் போகிறது என்று கேரள திரைப்பட நடிகர்களை வைத்து சமூக வலைதளங்களில் பரப்புரை செய்யப்பட்டது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் விரைவில் உச்ச நீதிமன்றத்தை நாட ஆவன செய்து, மத்திய நீர்வள ஆணையம் மற்றும்  மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை ரத்து செய்யவும், பேபி அணையைப் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com