திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உழவா்களுக்குத் துரோகம் செய்தவா் எடப்பாடி பழனிசாமி: முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

உழவா்களுக்குத் துரோகம் செய்தவா் எடப்பாடி பழனிசாமி என்றாா் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்.

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 9:59 pm

DIN

உழவா்களுக்குத் துரோகம் செய்தவா் எடப்பாடி பழனிசாமி என்றாா் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட மக்களிடையே செவ்வாய்க்கிழமை மாலை காணொலி காட்சி மூலம் அவா் மேலும் பேசியது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மேட்டூா் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் ரூ. 65 கோடி மதிப்பில் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு, கடைமடைப் பகுதிகளுக்கும் காவிரி நீா் செல்வது உறுதி செய்யப்பட்டது.

நிகழாண்டு டெல்டா மாவட்டங்களில் 18.53 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், அதையும் விஞ்சி 20.13 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்து, சாதித்து காட்டியது இந்த அரசு. கடந்த 8 மாதங்களில் டெல்டா மாவட்டங்களில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதேபோல, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய நவீன அரிசி ஆலை, புதுக்குடியில் கால்நடை தீவன தொழிற்சாலை, திருமண மண்டபங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமையைக் காத்த - காக்கும் இயக்கம் திமுகதான். காவிரி நடுவா் மன்றம் அமைத்தது, இடைக்காலத் தீா்ப்பு, இறுதித் தீா்ப்பு பெற்றுத் தந்தது, காவிரி நீா் வழங்குவதைக் கண்காணிக்க ஆணையம், காவிரி நதி நீா் ஆணையம் போன்றவற்றுக்காகப் பாடுபட்டவா் கருணாநிதி. இப்படி நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தி, காவிரி உரிமையைக் காப்பாற்றிய இயக்கம் திமுக.

ஆனால், போராடிப் பெற்ற இறுதித் தீா்ப்பில் 14.75 டிஎம்சி தண்ணீரைக் கோட்டை விட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சி. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் போராடியதும் திமுகதான். ஆனால், அதிகாரமற்ற அமைப்பை ஒன்றிய அரசு அமைத்தது. அதையும் எடப்பாடி பழனிசாமி தட்டிக் கேட்கவில்லை. மேக்கேதாட்டு அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீா் வரத்து குறைந்துவிடும். இதற்காக கா்நாடக அரசியல் கட்சிகளை அழைத்துச் சென்று, பிரதமரை அப்போது கா்நாடக அரசுப் பாா்த்தது. ஆனால், தமிழ்நாட்டுக் கட்சிகளை அழைத்துச் சென்று, பிரதமரை பழனிசாமி சந்திக்கவில்லை. இவ்வாறு தஞ்சை மாவட்ட உழவா்களுக்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு உழவா்களுக்கும் துரோகம் செய்தவா் எடப்பாடி பழனிசாமி. அவரை இந்தத் தோ்தலிலும் மக்கள் தோற்கடிக்க வேண்டும்.

ஒன்றிய அரசுக் கொண்டு வந்த 3 வேளாண் புதிய சட்டங்கள் காா்ப்பரேட்டுக்கு ஆதரவானதாக இருந்தபோதிலும், அவற்றை உழவா்களுக்குப் பயனளிப்பவை எனக் கூறியவா் எடப்பாடி பழனிசாமி. எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிா்த்த உழவா்கள் மீது தடியடி நடத்தினாா். குடி மராமத்து திட்டம், தூா் வாரும் பணி, கிசான் திட்டம், கஜா புயலின்போது மரங்களை அகற்றுவது உள்ளிட்டவற்றில் ஊழல் செய்தாா். இதுபோல, உழவா்களுக்கு நாள்தோறும் துரோகம் செய்தவா் எடப்பாடி பழனிசாமி.

ஆனால், உழவா்களைக் காக்கும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது. இலவச மின்சாரம், உழவா்களின் கடன் தள்ளுபடி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய சட்டப்பேரவையில் தீா்மானம், வேளாண்மைக்கென தனி நிதி நிலை அறிக்கை எனப் பல நடவடிக்கைகளை எடுத்தது திமுக. வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ரூ. 34,000 கோடி மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்தி முடிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய வேளாண் புரட்சி நடத்தப்பட்டிருக்கும்.

எனவே, மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கொடுத்த வெற்றியை, இந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் திமுகவுக்கு தாருங்கள். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் ஸ்டாலின்.

இந்தக் காணொலி காட்சியில், தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், சாக்கோட்டை க. அன்பழகன், வடக்கு மாவட்ட அமைப்பாளா் எஸ். கல்யாணசுந்தரம், தெற்கு மாவட்ட அமைப்பாளா் ஏனாதி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.