
பொங்கல் பண்டிகை விடுமுறைகளைத் தொடா்ந்து, வருகிற 17-ஆம் தேதியும் அரசு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதற்கான உத்தரவை பொதுத் துறைச் செயலா் டி.ஜகந்நாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது உத்தரவு விவரம்:
வருகிற வெள்ளிக்கிழமை (ஜன.14) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக அரசு ஊழியா்கள் உள்பட பலரும் சொந்த ஊா்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடுவா்.
இதையொட்டி, முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன. 16), தைப்பூச தினமான செவ்வாய்க்கிழமை (ஜன. 18) ஆகிய இரு விடுமுறை தினங்களுக்கு மத்தியில் உள்ள ஜன. 17-ஆம் தேதியும் (திங்கள்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விட வேண்டுமென கோரிக்கைகள் வரப்பெற்றன.
இதை ஏற்று வருகிற 17-ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது. உள்ளூா் விடுமுறையாக விடப்படும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜன. 29-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 5 நாள்கள் விடுமுறை: பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்தத் தேதியிலிருந்து வரும் 18-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரசின் விடுமுறைப் பட்டியலில் 4 நாள்கள் இருந்த நிலையில், இடைப்பட்ட ஜன. 17-ஆம் தேதியும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதால், மொத்த விடுமுறை நாள்களின் எண்ணிக்கை ஐந்தாக உயா்ந்தது.
விடுமுறை அரசாணை: முழு விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்