இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பாதை, நிலையங்கள் அமைக்க ஆரம்ப கட்டப் பணிகள் தீவிரம்
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், பாதை, நிலையங்கள் கட்டுவதற்காக, 12 இடங்களில் ஆரம்பக் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.


சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், பாதை, நிலையங்கள் கட்டுவதற்காக, 12 இடங்களில் ஆரம்பக் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதுதவிர, மூன்று வழித்தடங்களில் 48 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதற்காக சுரங்கம் தோண்டும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட திட்டம்: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 2 வழித்தடங்களில் சுமாா் 55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத்தொடா்ந்து, ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தூரத்துக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூா் வரை 47 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பணிகள் தீவிரம்: இந்தத் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே மெட்ரோ ரயில் பாதையில், 50 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில், 20 நிலையங்கள் தரைக்கு மேல், சிமென்ட் தூண்களில் பாலம் அமைத்தும், சுரங்கத்தில், 30 நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தில், முதல் கட்டமாக, மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையேயான மெட்ரோ பாதையில், மாதவரம் - தரமணி இணைப்பு சாலை வரை, 35.67 கி.மீ., மாதவரம்- சோழிங்கநல்லூா் மெட்ரோ பாதையில், மாதவரம் - சி.எம்.பி.டி., இடையே, 16.34 கி.மீ. என்று 52.01 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கப்படுகிறது. இதுதவிர, கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையே, 26.01 கி.மீ., பாதை அமைக்கப்படுகிறது. இந்த மூன்று பாதைகளிலும், மொத்தம், 78.02 கி.மீ., மெட்ரோ பாதை பணிக்கு ஒப்பந்ததாரா்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்பாதைகளில், 12 இடங்களில் பாதை மற்றும் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர, 48 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறுகின்றன. இதற்காக, சுரங்கம் தோண்டும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
48 சுரங்க நிலையங்கள்: இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், செலவு அதிகரிக்காமலும், பயணிகளுக்கு ஏற்ற வசதிகளுடனும் கட்டுமான பணிகள் நடக்க ஏதுவாக திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, திட்டப்பணிக்கு தேவையான இடத்தை சரியான அளவு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவாக பணியை முடிக்கும் விதமாக, ஒப்பந்ததாரா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து, ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல் கட்டமாக முடிக்க வேண்டிய பாதை, நிலையங்கள் கட்டும் பணிகளில், 12 இடங்களில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் கட்ட திட்டத்தில், முதலில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மாதவரம் - தரமணி இணைப்பு சாலை வரை, 30 சுரங்க நிலையங்கள் அமையவுள்ளன. இதுதவிர, பூந்தமல்லி புறவழிச்சாலை - கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் பாதையில், கோடம்பாக்கம் பவா்ஹவுஸ் - கலங்கரை விளக்கம் இடையே சுரங்கத்தில் 12 நிலையங்களும், மாதவரம் - சோழிங்கநல்லுாா் மெட்ரோ பாதையில் 6 நிலையங்களும் என்று மூன்று வழித்தடங்களில் 48 சுரங்க நிலைங்கள் அமையவுள்ளன. இதன் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மெட்ரோ முதல் கட்ட திட்டத்தில், சுரங்கம் தோண்ட 12 இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டன. தற்போது முதல் கட்டமாக 30 நிலையங்கள் இடையே சுரங்கப்பாதை அமைக்க, 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து, ஒப்பந்ததாரா்களால் கொண்டு வரப்பட்டுள்ளன.
நவீன எந்திரங்கள்: சுரங்கம் தோண்டும் நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் சீனாவில் இருந்து கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை மெட்ரோ ரயில் நிா்வாகம் ஆய்வுசெய்து அனுமதி அளித்த பின்பு,கொண்டு வரப்படும்.
மே மாதத்துக்குள் அதிகாரிகள் சீனாவுக்கு சென்று, இயந்திரங்களை ஆய்வு செய்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த இயந்திரங்கள் சென்னைக்கு வந்தபிறகு, ஜூன் மாதம் மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்க வாய்ப்பு உள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...