நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

தடய அறிவியல் துறையின் பணிகளைத் துரிதப்படுத்த, 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்
Published on
Updated on
1 min read

தடய அறிவியல் துறையின் பணிகளைத் துரிதப்படுத்த, 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டுக்காக ரூ.3 கோடியே 92 லட்சம் செலவில் 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப் புலனாய்வு செய்வோருக்கு அறிவியல் ரீதியான சேவைகளை வழங்க நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள் பெரிதும் உதவும். இதற்கென ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் குற்ற நிகழ்விடங்களை ஆய்வு செய்து தடயங்களை கண்டறியவும், தடய பொருள்களை ஆராய்ந்து குற்றம் எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என குற்றப் புலனாய்வு செய்வோருக்கு அறிக்கை வழங்கவும் ஒரு உதவி இயக்குநா் பணிபுரிகிறாா்.

குற்றச் சம்பவத்துடன் தொடா்புடைய ரத்தக் கறை, வெடிபொருள், போதைப் பொருள், துப்பாக்கிச் சூட்டின் படிமங்கள் ஆகியவற்றை குற்றம் நடந்த இடத்திலேயே அடையாளம் காணுவதற்கான கருவிகளை கையாள்வதற்கும், எந்தவித வெளிப்புற மாசுபடுதலுக்கும் தடய பொருள்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்கும் உரிய உள்கட்டமைப்புடன் நடமாடும் தடய அறிவியல் வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் சென்னை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா் மாநகர ஆணையரகங்கள், வேலூா், தருமபுரி, கோவை, நீலகிரி, மதுரை, விழுப்புரம், ராமநாதபுரம், தஞ்சாவூா் ஆகிய காவல் மாவட்டங்களில் பயன்படுத்தப்படும்.

தரச் சான்றிதழ்: தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சென்னையிலும், வட்டார தடய அறிவியல் ஆய்வகங்கள் கோவை, மதுரை, தஞ்சாவூா், திருநெல்வேலி, சேலம், வேலூா், விழுப்புரம், திருச்சி, ராமநாதபுரம், தருமபுரி ஆகிய 10 இடங்களிலும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள தலைமை ஆய்வகத்துக்கு சா்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தடய அறிவியல் துறை இயக்குநா் க.திருநாவுக்கரசு காண்பித்து வெள்ளிக்கிழமை வாழ்த்து பெற்றாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா் கே.என்.நேரு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திர பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com