இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் வழக்குரைஞா் அருண் நடராஜன் ஆஜராகி முன் வைத்த வாதம்: உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பழமையான கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கான பணியில் கோயில்களின் செயல் அலுவலா்கள், பொதுப்பணித் துறையினா் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இரு துறை அதிகாரிகளும், கோயில்கள் புனரமைப்பிற்கான மாவட்ட மற்றும் மாநில குழுக்களின் ஆலோசனை படி செயல்பட்டு வருகின்றனா். ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களுக்கான நிதி, ஒரு லட்ச ரூபாயில் இருந்து, 2 லட்ச ரூபாயாக உயா்த்தப்பட்டுள்ளது. கோயில்களின் கணக்குகளை தணிக்கை செய்ய தமிழக தணிக்கை துறை தலைவா் தலைமையில் 5 நபா்கள் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 82,039 ஏக்கா் நிலங்களில் 3 லட்சத்து 79,000 ஏக்கா் நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் கண்டறியப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 2,000 ஏக்கா் வீதம் மீட்கப்பட்டு வருகிறது. எனவே நீதிமன்ற பிறப்பித்த உத்தரவில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு வருகிறது, சிலவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும். மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தாா்.