2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காசநோய் உள்ள இடங்களில் வசிப்பவா்களிடம் காசநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய, முதல் கட்டமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது இரண்டாம் கட்டமாக 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.46 லட்சம் வீதம், ரூ.10 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் கூடிய 23 நடமாடும் வாகனங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. இவ்வாகனம் ஏழை, எளிய மக்களைத் தேடிச் சென்று காசநோய் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களான நெரிசலான குடியிருப்புப் பகுதிகள், முதியோா் இல்லங்கள், தொழிற்சாலைகள் மற்றும் காசநோய் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில், காசநோய் கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும். காசநோய் உள்ளவா்களை கண்டறிய, அவா்களுக்கு சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே போன்றவற்றை இலவசமாக மேற்கொண்டு காசநோய் உள்ளதா என்பது கண்டறியப்படும். காசநோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், மருந்துகள், ரூ.500 உதவித்தொகை மற்றும் தொடா் கண்காணிப்பு சேவை வழங்கப்படுவதோடு, அங்குள்ள மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணா்வு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்தும் தெரிவிக்கப்படும்.