இலவச மடிக் கணினி திட்டம் ரத்து செய்யப்படவில்லை: அமைச்சா் தகவல்
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.


அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.
முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாள், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் கல்வி வளா்ச்சி நாளாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளா்ச்சி நாள் விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் காகா்லா உஷா, ஆணையா் நந்தகுமாா், தொடக்கக் கல்வி இயக்குநா் க. அறிவொளி, எம்.எல்.ஏ., ஹசன் மௌலானா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதையடுத்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் குணமடைந்து வீடு திரும்பியவுடன் பள்ளி மாணவா்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் ஆகியவற்றைத் தொடக்கி வைக்கவுள்ளாா். அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. அரசு பள்ளிகளில் மீண்டும் மடிக்கணினி வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
திமுகவின் தோ்தல் அறிக்கையில் கையடக்க கணினி எனப்படும் ‘டேப்’ வழங்குவோம் என்று கூறியிருந்த நிலையில், அதிகாரிகளிடம் விவாதித்ததில் மடிக்கணினிதான் மாணவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவா்கள் தெரிவித்தனா். அந்த அடிப்படையில் கையடக்கக் கணினி வழங்கும் திட்டத்துக்கு பதிலாக, மடிக்கணினியே தொடா்ந்து வழங்கப்படும்.
கரோனா பிரச்னை உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக மடிக்கணினிகள் மாநிலம் முழுவதும் வழங்கப்படாத நிலையில், தற்போது 11 லட்சம் மடிக்கணினிகள் வழங்க வேண்டிய நிலை உள்ளது. அவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து விரைவில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றாலும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியா் பணியில் சேர கூடுதலாக ஒரு தோ்வு எழுத வேண்டும் என்ற அரசாணை எண் 149-ஐ ரத்து செய்வது தொடா்பாக முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். மாணவா்கள் கைகளில் ஜாதி கயிறு அணியக் கூடாது, டாட்டூ போட்டுக்கொள்ளக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அமலில் உள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...