
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
மத்திய அரசின் தொடர் வலியுறுத்தலுக்கு ஏற்ப, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அதன்படி, 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயா்த்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்படி, ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயா்கிறது. வீட்டு உபயோகத்திற்கு ஏற்கெனவே வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியமும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 101 யூனிட் முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
'மின்கட்டண உயர்வு குறித்து கருத்துகளை அளிக்க மின் நுகர்வோருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். கருத்துக்கள் அனைத்தும் ஆகஸ்ட் 22ம் தேதிக்கு முன்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பப்படும்.
மேலும், மின் கட்டண விவரம் மின்சார வாரிய இணையதளங்களில் வெளியிடப்படும்' என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மின் கட்டணம்: யாருக்கு எவ்வளவு உயருகிறது? முழு விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.