எடப்பாடி அருகே முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்: நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளை

எடப்பாடி அருகே முகமூடி கொள்ளையர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 
எடப்பாடி அருகே கொள்ளை சம்பவம் நிகழ்ந்த வீடு
எடப்பாடி அருகே கொள்ளை சம்பவம் நிகழ்ந்த வீடு
Published on
Updated on
1 min read

 
எடப்பாடி: எடப்பாடி அருகே முகமூடி கொள்ளையர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 

எடப்பாடி அடுத்த கள்ளுகடை, காவான் காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (48) இவரது மனைவி விஜயலட்சுமி, இத்தம்பதியினர் எடப்பாடி - பூலாம்பட்டி பிரதான சாலையை அருகாமையில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஜெய் கணேஷ் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகம் வாயிலாக, மாணவர்களை வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கு அனுப்பும் பணி செய்து வருகிறார். 

இந்நிலையில், புதன்கிழமை இரவு ஜெய் கணேஷ் குடும்பத்தினர் வழக்கம் போல் இரவு உணவு முடிந்து தூங்க சென்றனர். கீழ்த்தலத்தில் உள்ள பிரதான கதவை பூட்டிவிட்டு ஜெய்கணேஷ் முதல் மாடியின் வெளிப்புறத்திலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் உள்புறத்திலும் உறங்கிக் கொண்டிருந்தனர். 

அப்போது, நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்து அங்கு வந்த கொள்ளையர்கள் பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்து. அங்கு சாமி படத்தின் பின்புறம் வைத்துள்ள ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை கொள்ளையடித்து உள்ளனர். 

மேலும், அங்குள்ள சிறிய நகை ஒன்றையும் கொள்ளையடித்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த பீரோவை திறக்க முயற்சி செய்துள்ளனர் அப்போது சத்தம் கேட்டு விழித்தெழுந்த விஜயலட்சுமி அங்கு முகமூடி அணிந்து மர்ம நபர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டுள்ளார். 

இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற கொள்ளையர்கள் ஜெய்கணேஷ் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள எல்லகுட்டூர் பகுதியில் உள்ள ஒரு விவசாயி வீட்டுக்கு சென்று வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து வீட்டினுள் நுழைய முயன்றுள்ளனர். அப்போது விவசாயின் வீட்டில் இருந்தவர்கள், பருத்தியை பிரித்து எடுத்துக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சூழ்நிலையில், கொள்ளையர்களை கண்ட அவர்கள் சத்தம் போட்டு விரட்டி பிடிக்க முயற்சி செய்த போது கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பூலாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், அப்பகுதியில் காவல் துறை உயர் அலுவலர்கள் முகாமிட்டு கொள்ளையர்களை பிடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் பூலாம்பட்டி காவல் எல்லைக்குள்பட்ட பாறைக்காடு பகுதியில் உள்ள லாரி ஓட்டுநர் வீட்டிலும், பில்லக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வீட்டிலும் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசியை காட்டிய  நிலையில், தொடர்ந்து இப்பகுதியில் நடைபெறும் முகமூடி கொள்ளை சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com