கள்ளக்குறிச்சியில் 13ஆம் தேதி தொடங்கிய இறுதிப் பயணம்.. உயிரியல் புத்தகத்துடன் நிறைவு

மாணவி ஸ்ரீமதியின் இறுதிப் பயணம் கடந்த 13ஆம் தேதி தொடங்கி இன்று உயிரியல் புத்தகத்துடன் மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் 13ஆம் தேதி தொடங்கிய இறுதிப் பயணம்.. உயிரியல் புத்தகத்துடன் நிறைவு
கள்ளக்குறிச்சியில் 13ஆம் தேதி தொடங்கிய இறுதிப் பயணம்.. உயிரியல் புத்தகத்துடன் நிறைவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் இறுதிப் பயணம் கடந்த 13ஆம் தேதி தொடங்கி இன்று உயிரியல் புத்தகத்துடன் மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளி மாணவியின் உடல் 10 நாள்களாக பிணவறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சனிக்கிழமை காலை 6.45 மணி அளவில் தொழிலாளர்கள் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் முன்னிலையில் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர். மேலும், அமைச்சர் கணேசன், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவசர ஊர்தி மூலமாக மாணவியின் உடல், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களது வீட்டில்  இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிறகு, அவரது குடும்ப முறைப்படி இடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  அவரது உடலுடன், அவர் 12ஆம் வகுப்பில் படித்து வந்த உயிரியல் பாடப் புத்தகமும் சேர்த்து புதைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் வரை சென்ற பெற்றோர்

தனது மகளின் மரணத்துக்கு நியாயம் கேட்டு, பெற்றோர் உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். தங்கள் தரப்பு மருத்துவர்களைக் கொண்டு மகளின் உடலை மறுகூறாய்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் ஏற்க மறுத்துவிட்டன.

பெற்றோருக்கு அறிவுரை சொன்ன நீதிமன்றம்

உடலை வாங்க மறுத்த பெற்றோருக்கு நீதிபதி நேற்று கூறியிருந்ததாவது: மாணவியின் பெற்றோரின் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. அதேவேளையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏன்? ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்னையை ஏற்படுத்துகிறீா்கள்; மகளின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீா்கள்; அமைதியான முறையில் தீா்வு காணுங்கள்.

மாணவி உடலை மறு கூறாய்வு செய்ய வேண்டுமென உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிடவில்லை. எனவே, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை.

ஒரு மாதத்தில் அறிக்கை

உடல்கூறாய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் 3 மருத்துவா்கள், தடயவியல் நிபுணா் ஆகியோா் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டாா். அறிக்கைகள், விடியோ பதிவுகளை ஜிப்மா் தரப்பிடம் ஒப்படைக்க தமிழக அரசுக்கும் உத்தரவிட்டாா்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

மர்மமான முறையில் மரணமடைந்த மாணவி ஸ்ரீமதியின் உடல், இரண்டு உடல் கூறாய்வுகளுக்குப் பின் 10 நாள்களாக பிணவறையில் பல்வேறு சட்டப்போராட்டங்களைக் கடந்து இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறு விபத்து

தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் இருந்து மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. வேப்பூர் அருகே செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் சிறு விபத்துக்குள்ளானது. ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸின் முகப்பில் சிறிது சேதம் ஏற்பட்டது. அதன்பின்னர் ஆம்புலன்ஸ் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.  

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்ட மாணவியின் உடல், அவர்களது முறைப்படி இறுதிச் சடங்கு செய்து மிக அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெற்றதையொட்டி, கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் 3,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com