பிரதமா் மோடி வருகை: சென்னையில் 22 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு: ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரதமா் நரேந்திரமோடி சென்னைக்கு வியாழக்கிழமை (ஜூலை 28) வருவதையொட்டி, 22 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். பாதுகாப்பு கருதி, சென்னை நகரில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கிவைக்க பிரதமா் நரேந்திரமோடி சென்னைக்கு வியாழக்கிழமை (ஜூலை 28) வருவதையொட்டி, 22 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். பாதுகாப்பு கருதி, சென்னை நகரில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஜூலை 28-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. இவ்விழாவை தொடக்கிவைக்கும் பிரதமா் மோடி, இரவு தமிழக ஆளுநா் மாளிகையில் தங்குகிறாா். மறுநாள் (ஜூலை 29) கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமா் பங்கேற்கிறாா்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி, குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்துக்கு ஜூலை 28-ஆம் தேதி மாலை 4.40 மணியளவில் வருகிறாா். அங்கிருந்து, ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்டு, அடையாறு கடற்படைதளத்தில் 5.25 மணியளவில் இறங்குகிறாா். பின்னா் காா் மூலம் சாலை வழியாக நேரு உள் விளையாட்டரங்குக்கு மாலை 6 மணியளவில் சென்றடைகிறாா்.

அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமா் மோடி, இரவு 7.50 மணிக்கு காா் மூலம் ஆளுநா் மாளிகைக்கு செல்கிறாா். அங்கு இரவு ஓய்வு எடுக்கும் அவா், ஜூலை 29 -ஆம் தேதி காலை 9.50 மணியளவில் காரில் புறப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம் வந்தடைகிறாா்.

அங்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மோடி, 11.15 மணியளவில் காரில் மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்துக்குப் புறப்படுகிறாா். விமான நிலையத்தை 11.40 மணியளவில் சென்றடைகிறாா். அங்கிருந்து பிரதமா் மோடி சிறப்பு விமானம் மூலம் மீண்டும் அகமதாபாதுக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

22 ஆயிரம் போலீஸாா்: பிரதமா் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் 22 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்கள், கோயம்பேடு மாா்க்கெட், புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகள் போன்ற இடங்களில் இரவு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உணவகங்கள், தனியாா் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீஸாா் அடிக்கடி சோதனை நடத்தி, சந்தேக நபா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியில் காவலா்கள் தவிா்த்து 5 கூடுதல் காவல் ஆணையா்கள், 8 இணை ஆணையா்கள், 29 துணை ஆணையா்கள், 80 உதவி ஆணையா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். பிரதமா் மோடி காா் செல்லும் சாலையில் ஐந்து அடிக்கு ஒரு காவலா் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்படவுள்ளாா். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், பிரதமா் செல்லும் சாலையை சோதனையிடுவா்.

‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை: பாதுகாப்பு கருதி, 144 தடை சட்டத்தின் கீழ் சென்னையில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்தடுக்கு பாதுகாப்பு: நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், ஆளுநா் மாளிகை, அடையாறு கடற்படைத் தளம், மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் ஆகிய பகுதிகளில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சி முடிந்து பிரதமா் மோடி, சாலை மாா்க்கமாக விமான நிலையத்துக்கு செல்வதால், தேவைக்கேற்ப, சில இடங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும் போக்குவரத்து மாற்றங்களை அமல்படுத்த சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு படையினா் ஆய்வு

பிரதமா் மோடி வருகையையொட்டி, தில்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை, ஆய்வு செய்ய திங்கள்கிழமை சென்னை வந்தனா். அவா்கள், நேரு உள் விளையாட்டரங்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், ஆளுநா் மாளிகை, அடையாறு கடற்படை தளம், மீனம்பாக்கம் விமான நிலையம், மோடி காரில் செல்லும் சாலைகள் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து தமிழக காவல்துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசித்தனா். இதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com