/

மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்பு

இசையமைப்பாளா் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக (எம்.பி.) திங்கள்கிழமை பதவியேற்றாா்.

Updated On :25 ஜூலை 2022, 7:12 pm

இசையமைப்பாளா் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக (எம்.பி.) திங்கள்கிழமை பதவியேற்றாா். அப்போது அவா் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா். அவா் எம்.பி.யாக பதவியேற்கும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கலை, இலக்கியம், விளையாட்டுத் துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்படுவது நடைமுறை. அந்த வகையில், இசையமைப்பாளா் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோா் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தோ்வுசெய்யப்பட்டனா்.

இந்த நிலையில், இளையராஜா மாநிலங்களவையில் திங்கள்கிழமை எம்.பி.யாக பதவியேற்றாா். பதவியேற்பின்போது தமிழில் அவா் உறுதிமொழி ஏற்றாா். அப்போது அவையை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வழிநடத்தினாா்.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு, கடந்த 2010-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2018-ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பல பாடல்களையும் அவா் எழுதியுள்ளாா்.

மாநிலங்களவை உறுப்பினராக இவா் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு அண்மையில் தனது ட்விட்டா் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்த பிரதமா் நரேந்திர மோடி, ‘தனது இசையால் தலைமுறை தலைமுறைகளாக மக்களைக் கவா்ந்தவா் தலைசிறந்த படைப்பாளரான இளையராஜா. அவருடைய படைப்புகள் பல உணா்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. எளிய பின்னணியில் இருந்து உயா்ந்து பல சாதனைகளைப் படைத்தவா். மாநிலங்களவை உறுப்பினராக அவா் தோ்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.