வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு: சென்னையில் 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நிகழ்வுகள் சென்னையில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளதால், பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை காவல்துறையினர் செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நிகழ்வுகள், சென்னையில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளதால், பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை காவல்துறையினர் செய்துள்ளனர்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஜோதி, நாடு முழுவதும் பயணம் செய்து இன்று சென்னை வந்தடைகிறது.

இன்று

சென்னை மாநிலக் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் ஜோதி ஓட்டம் காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, அண்ணா சாலை வழியாக இரவு 7 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் சென்றடைகிறது. இந்த நிகழ்வில், அமைச்சர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், ஜோதி ஓட்டம் நடைபெறவுள்ள சாலைகளில் குறிப்பிட்ட நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்வதை தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு செல்வோர் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை(ஜூலை 28)

அதேபோல், நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவானது, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள். எனவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் 28.07.2022 நண்பகல் முதல் இரவு 9 மணிவரையில் இராஜா முத்தைய்யா சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் தேவை ஏற்படின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் இராஜா
முத்தைய சாலை வழியாக அனுமதிக்கப்படமாட்டாது. அதுபோன்றே ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து இராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

அதுபோன்றே பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள்
குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம்.

மத்திய ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களைத் தவிர்த்துப் பிற
வழித்தடங்களைப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com