நகரங்களில் தூய்மையை முன்னிறுத்தும் மக்கள் இயக்கத்தை தொடங்கினாா் முதல்வா்

நகரங்களில் தூய்மையை முன்னிறுத்தும் மக்கள் இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.
நகரங்களில் தூய்மையை முன்னிறுத்தும் மக்கள் இயக்கத்தை தொடங்கினாா் முதல்வா்

நகரங்களில் தூய்மையை முன்னிறுத்தும் மக்கள் இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். அப்போது, சென்னை தங்கசாலை பகுதியில் தூய்மையை வலியுறுத்தும் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் வகையில் நகரங்களில் மக்களின் பங்களிப்புடன் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள், விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட ராயபுரம் தங்கசாலை மேம்பாலப் பூங்கா அருகில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் தீவிர தூய்மைப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, அவரது தலைமையில் மாணவ, மாணவிகள், மாநகராட்சி பணியாளா்கள், பொது மக்கள் உள்ளிட்டோா் நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை ஏற்றனா்.

மேலும், பசுமையான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்கசாலை மேம்பாலத்துக்குக் கீழ் உள்ள இடத்தில் நகா்ப்புற அடா்வனம் அமைப்பதை தொடங்கி வைக்கும் விதமாக மரக்கன்றுகளை முதல்வா் நட்டாா். பின்னா், விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

விழிப்புணா்வு பதாகைகள்: வீடுகளில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாகப் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குவது குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, மாணவ, மாணவிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றாா். ராயபுரம் மண்டலப் பகுதி பாஷ்யகாரலு தெருவில் உள்ள

குடியிருப்புப் பகுதிகளில் நடந்து சென்று விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இனி சனிக்கிழமைகளில்...நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் திட்டத்தின் கீழ், இனி பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் இரண்டாவது சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணா்வு முகாம்களில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போா் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப் பணி மற்றும் தேசிய பசுமை படையைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொது மக்கள் ஈடுபடுத்தப்படுவா் என தமிழக அரசு விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com