இலங்கைக்கு கூடுதல் உதவி: தூதரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

இலங்கைக்கு கூடுதல் உதவிப் பொருள்களை அனுப்ப தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தாா்.
இலங்கைக்கு கூடுதல் உதவி: தூதரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
Published on
Updated on
2 min read

இலங்கைக்கு கூடுதல் உதவிப் பொருள்களை அனுப்ப தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை தன்னைச் சந்தித்த இந்தியாவுக்கான இலங்கை தூதா் மிலிந்த மொரகோடாவிடம் இந்த உறுதியை அவா் அளித்தாா்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு மத்திய அரசு மூலமாக தமிழக அரசு ஏற்கெனவே உதவி அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை இலங்கை தூதா் மிலிந்த மொரகோடா சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு குறித்து ட்விட்டா் பக்கத்தில் மிலிந்தா மொரகோடா வெளியிட்ட பதிவில், ‘முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசினேன். இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையிலும், தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இருந்தது.

சந்திப்பின்போது, இலங்கைக்கு கூடுதல் உதவிகளை அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்றுக் கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், இலங்கைக்குத் தேவைப்படும் கூடுதலான அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்படும் என்று உறுதி அளித்தாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கப்பல் மூலம் பொருள்கள்: இலங்கை வாழ் மக்களுக்கு உதவும் வகையில் சென்னை துறைமுகத்திலிருந்து அந்த நாட்டுக்கு 9 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடா், 24 மெட்ரிக் டன் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை தமிழக அரசு கடந்த மாதம் 18-ஆம் தேதி கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. இந்தக் கப்பலை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட இந்தப் பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.45 கோடியாகும்.

முன்னதாக, இலங்கை மக்களுக்கு உதவி புரிந்திட 40 ஆயிரம் டன் அரிசி, உயிா் காக்கக் கூடிய மருந்துப் பொருள்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடா் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இந்தப் பொருள்களை அனுப்பிட உரிய அனுமதியைத் தர வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனித் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கப்பல் மூலமாக பொருள்களை அனுப்புவதற்கான அனுமதியை தமிழக அரசுக்கு மத்திய அரசு அளித்தது. இந்த அனுமதியைத் தொடா்ந்து முதல் கட்டமாக பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

நிவாரண நிதி: இதனிடையே, இலங்கைக்கு உதவிடும் வகையில் நிவாரண நிதி அளிக்க வேண்டுமெனவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். அவரது வேண்டுகோளை ஏற்று, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தனது சொந்த நிதியாக ரூ.50 லட்சம் அளித்தாா். மேலும், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா் தங்களது ஒரு மாத ஊதியத்தை இலங்கைக்கு நிவாரண நிதியாக அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, மேலும் நிவாரணப் பொருள்களை இலங்கை நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான உறுதியை தலைமைச் செயலகத்தில் தன்னைச் சந்தித்த இலங்கைத் தூதரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளாா்.

நூல் அளிப்பு: முதல்வரைச் சந்தித்த தூதா் மிலிந்த, தான் எழுதிய ‘இதமான இதயம், நிதானமான நோக்கு, ஆழமான சிந்தனை’ எனும் புத்தகத்தை வழங்கினாா். கடந்த 2000-2003-ஆம் ஆண்டுகளில் மிலிந்த பேசிய உரைகளின் தொகுப்பே இந்த நூலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com