மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டு காலமாக நடந்துவந்த பட்டணப்பிரவேசத்தை திமுக திட்டமிட்டே தடை செய்ய உத்தரவு பிறப்பித்ததாக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு, அதிமுக நிர்வாகிகள் திருமண விழாக்களில் பங்கேற்றார்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை தருமபுரம் ஆதீனத்துக்கு சென்ற எடப்பாடி கே.பழனிசாமிக்கு, ஆதீன நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, கோபூஜை செய்து, பசு, காளை மற்றும் ஒட்டகத்துக்கு எடப்பாடி கே.பழனிசாமி கீரை, வேப்பிலை ஆகியவற்றை அளித்தார்.
தொடர்ந்து, ஆதீனத் திருமடத்துக்குள் சென்ற எடப்பாடி கே.பழனிசாமி தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றார். அவருக்கு குருமகா சந்நிதானம் நினைவுப்பரிசினை வழங்கி அருளாசி கூறினார். சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியது: மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கோரிக்கையான தனி மாவட்டத்தை அப்போதைய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக அறிவித்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்துக்கான நிலத்தை தருமபுரம் ஆதீனம் வழங்கியது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை சீற்றங்களாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அதிமுக அரசு உடனுக்குடன் உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டை பெற்றுத்தந்ததுடன், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்கடன் ரூ.12,810 கோடியை தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் ஹைட்டோகார்பன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது திமுக அரசு. அதனை தடுத்து நிறுத்த அதிமுக சட்டப்போராட்டம் நடத்தியதுடன்; காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவித்தோம். 50 ஆண்டுகால காவிரிநீர் பிரச்னைக்கு சட்டபோராட்டம் நடத்தி தீர்வு கண்டோம்.
தருமபுரம் ஆதீனத்திருமடத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உடன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் உள்ளிட்டோர்.
அறநிலையத்துறையினரின் ஆய்வுக்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு மத சம்பந்தமான, கோயில் சம்பந்தமான விஷயங்களில் முழு விபரம் கிடைத்த பின்புதான் கருத்து கூறமுடியும். அவர்களைப் போல அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை விடக்கூடாது. எல்லா மதத்தையும் சமாக நடத்த வேண்டும்.
ஆதீனங்களின் மரபுகளில் மூக்கினை நுழைக்க திமுக அரசு முயற்சிக்கிறது. 500 ஆண்டுகாலமாக நடந்துவரும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி ஏற்கெனவே இருந்து திமுக அரசிலும், அதிமுக அரசிலும் எந்த தடையும் இல்லை.
ஆனால் தற்போதைய திமுக அரசு திட்டமிட்டே பட்டணப்பிரவேசத்துக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து சட்டப்பேரவையில் அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் அனைத்துத் தரப்பினரும் தெரிவித்த எதிர்ப்பைத் தொடர்ந்து இறங்கிவந்து மீண்டும் நடத்த அனுமதியளித்தது.
விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லினை பாதுகாக்க தற்போதைய அரசு தவறிவிட்டது. தேவைக்கு ஏற்ப உரங்களை வாங்கி கையிருப்பு வைக்காததால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏழைக்குழந்தைகளின் நலனுக்காக அதிமுக கொண்டுவந்த எல்கேஜி, யுகேஜி வகுப்பை முடக்க நினைத்த அமைச்சர், கடும் எதிர்ப்பு காரணமாக மீண்டும் இயங்கும் என தெரிவித்துள்ளார்.
வி.கே.சசிகலா அதிமுகவில் உறுப்பினரே இல்லை. டிடிவி தினகரன் ஏற்கெனவே வேறு கட்சி தொடங்கிவிட்டார். அவர்களுக்கும்;, அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை. எனவே அவர்கள் குறித்து மீண்டும் கேள்வி கேட்கவேண்டாம். தமிழகத்தில் ஆளும்கட்சியை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்கட்சிதான். ஆனால் பிரதான எதிர்கட்சியாக உள்ளது அதிமுக மட்டும்தான் என்றார்.
இதில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், மா.சக்தி, மாவட்ட முன்னாள் செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், ஒன்றிய செயலாளர் பா.சந்தோஷ்குமார், நகர செயலாளர் எஸ்.செந்தமிழன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, ஆதீனக் கட்டளைத் தம்பிரான்கள், ஆதீன தலைமை கண்காணிப்பாளர் சி.மணி, ஆதீனப் பொது மேலாளர் கோதண்டராமன், கல்லூரிச் செயலர் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.