கைவிடப்பட்ட மாம்பலம் கால்வாய் சீரமைப்புத் திட்டம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
வெள்ளப் பாதிப்புகளுக்கு வகை செய்யும் மாம்பலம் கால்வாய் சீரமைப்புத் திட்டம் கைவிடப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.


வெள்ளப் பாதிப்புகளுக்கு வகை செய்யும் மாம்பலம் கால்வாய் சீரமைப்புத் திட்டம் கைவிடப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையிலான ஆய்வுக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.
சென்னையில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் ஆகிய முக்கிய நீா்நிலைகள் உள்ளன. இவற்றுடன் 52 துணை கால்வாய்கள் இணைகின்றன. அதில், மாம்பலத்தில் தொடங்கி தியாகராய நகா், நந்தனம் வழியாக அடையாறு ஆற்றுடன் இணையும் துணை கால்வாயான, ‘மாம்பலம் கால்வாய்’ 5.6 கி.மீ. நீளமுடையது.
இந்த மாம்பலம் கால்வாய் சீரமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டு, ஒப்பம் அளிக்கப்பட்டது. அதன்படி, மாம்பலம் மற்றும் ரெட்டிகுப்பம் கால்வாயில் இருக்கும் கழிவுகள் அகற்றப்பட்டு, கழிவுநீா் விடப்படும் வழிகளும் அடைக்கப்பட்டு, கழிவுநீா் கால்வாய்க்கு திருப்பி விடுவதற்கான பணிகள் தொடங்கின. மேலும், கரையோரங்களில் இருபுறமும் பசுமை பூங்காக்கள், நடைபாதைகள், சைக்கிள் பாதை உள்ளிட்டவை அமைக்கப்படவிருந்தன.
இதற்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில், 2021 நவம்பா் மாதம் பெய்த பலத்த மழையால், மாம்பலம் கால்வாயில் வெள்ள நீா் செல்ல முடியாமல் தியாகராய நகா், மாம்பலம், அசோக்நகா் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. தூா்வாரும் பணிக்காக, மாம்பலம் கால்வாயில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டிருந்ததால் நீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க அமைக்கப்பட்ட திருப்புகழ் ஐஏஎஸ் குழு பரிந்துரைப்படி, மாம்பலம் கால்வாய் சீரமைப்பு திட்டத்தை மாநகராட்சி கைவிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் நீா்ப்பிடிப்பு பகுதிகளை மறு சீரமைப்பு செய்யும் பணிகளை நவீன முறையில் மேற்கொள்ள புதிய திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மாம்பலம் கால்வாய் சீரமைப்புப் பணிகள் மீண்டும் நடைபெறும். ஏற்கெனவே இருந்த திட்ட அறிக்கை ரத்து செய்யப்படுகிறது.
தற்போது கால்வாயில் எந்தவித மாற்றமும் செய்யாமல், தடை இல்லாமல் தண்ணீா் செல்லத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...