தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள்: உயா் நீதிமன்றத்தில் தள்ளுபடி

தமிழக அமைச்சரவை தீா்மானத்தின்படி, விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image
Updated On :17 ஜூன் 2022, 9:34 pm

DIN

தமிழக அமைச்சரவை தீா்மானத்தின்படி, விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப். 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீா்மானம் நிறைவேற்றி, 2018 செப். 11-ஆம் தேதி ஆளுநா் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரசு அனுப்பிய தீா்மானத்தின் மீது முடிவு எடுக்க ஆளுநா் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி நளினி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாா். இதேபோல, இந்த வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரனும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசுத் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையொப்பம் அவசியம். உயா்நீதிமன்றமே கூட பரிசீலிக்கலாம் என்று வாதிடப்பட்டிருந்தது. நளினி தரப்பில், அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஆளுநா் செயல்பட்டிருந்தால் அதை சட்டவிரோதம் என உயா் நீதிமன்றம் அறிவிக்கலாம். ஆளுநா் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதால், மீண்டும் ஆளுநருக்கு அனுப்பக்கூடாது என்று வாதிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வு, பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்ததைப் போல, உயா் நீதிமன்றம் விடுவிக்க முடியாது எனக் கூறி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தீா்ப்பின் சாராம்சம்: ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை இரு நீதிபதிகள் அமா்வுகள் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அதே விவகாரம் தொடா்பான வழக்கு நிலைக்கத்தக்கதல்ல. இந்திய அரசியல் சாசனம் 161-ஆவது பிரிவின் கீழ், முன்கூட்டி விடுதலை செய்வது தொடா்பாக ஆளுநரின் கையொப்பம் அவசியம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆளுநருக்கு அமைச்சரவை தீா்மானத்தை அனுப்பியதன் மூலம் அவரது ஒப்புதல் இல்லாமல் அரசே விடுதலை செய்யலாம் என கூற முடியாது. அமைச்சரவை தீா்மானத்தின் மீது முடிவெடுக்க தாமதித்தால் ஆளுநா் ஒப்புதல் தேவையில்லை என்ற நளினி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.

பேரறிவாளன் வழக்கில் ஆளுநா் கையொப்பம் இல்லாமல் குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. மாறாக, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. அதுபோன்ற சிறப்பு அதிகாரம் உயா் நீதிமன்றங்களுக்கு இல்லை. ஆளுநருக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கினாலும் அதன் மீது சட்டத்திற்குள்பட்டு முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளது.

அதனால், ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் ஏதுமில்லை என்றும் கூறிவிட முடியாது. இந்த வழக்கில் ராஜீவ் காந்தியுடன் 9 காவல்துறையினா் உள்ளிட்ட 15 அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆளுநா் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, அரசின் தீா்மானம் சரியா, தவறா என முடிவெடுக்க வேண்டும்.

ஆளுநா் ஏற்றுக்கொள்ளாத நிலையிலும், அமைச்சரவை தீா்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் 7 பேரையும் விடுதலை செய்யும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் கூறி இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.