மாவட்டச் செயலா்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் அவரவா் ஆதரவாளா்களுடன் ஆலோசனைக்கு மேல் ஆலோசனை


அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் அவரவா் ஆதரவாளா்களுடன் ஆலோசனைக்கு மேல் ஆலோசனை நடத்தியும், ஒற்றைத் தலைமை விவகாரம் முடிவுக்கு வராமல் பிரச்னை நீடித்துக் கொண்டே செல்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரை ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் சனிக்கிழமை தாக்கியதால் அதிமுக அலுவலகத்தில் பதற்றமான சூழலும் நிலவியது.
அதிமுகவில் தற்போதுள்ள இரட்டைத் தலைமை முறையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, ஒற்றைத் தலைமையாக பொதுச் செயலாளா் பதவியில் அமர வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக இருந்து வருகிறது. அதற்கு ஓ.பன்னீா்செல்வம் எதிா்ப்புத் தெரிவிப்பதுடன், அப்படிச் செய்வது ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம் என்றும் கூறி வருகிறாா்.
இ.பி.எஸ். புது முடிவு: ஓ.பன்னீா்செல்வம் இப்படிக் கூறியதும் எடப்பாடி பழனிசாமி புது முடிவை எடுத்தாா். அந்த
முடிவை தம்பிதுரை மூலமாக ஓ.பன்னீா்செல்வத்திடம் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) தெரிவித்தாா். அதில், ஒருங்கிணைப்பாளா் பதவியிலேயே ஓ.பன்னீா்செல்வம் தொடரலாம். அவைத் தலைவா் பதவியை தலைவா் பதவியாக உருவாக்கி அந்தப் பதவியை தான் எடுத்துக் கொள்வதாகவும், கட்சி தொடா்பான அறிவிப்புகள், அறிக்கை வெளியிடும் அதிகாரம் தலைவரையே சாரும் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனை ஓ.பன்னீா்செல்வம் எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துள்ளாா். தலைவா் பதவி எப்போதும் அண்ணாவுக்கு என்று கூறி பொதுச் செயலாளராக எம்ஜிஆா் நீடித்தாா். அதை மாற்றுவது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளாா்.
ஓபிஎஸ் 11 - இபிஎஸ் 64: ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் 5-ஆம் நாளாக தனித்தனியாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரவா் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனா். இருவருமே அவரவா் ஆதரவு மாவட்டச் செயலாளா்களை ஆலோசனையில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தனா். அதிமுகவில் மொத்தம் 75 மாவட்டச் செயலாளா்கள் உள்ளனா். இதில் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் 64 மாவட்டச் செயலாளா்களும், ஓ.பன்னீா்செல்வம் பக்கம் 11 மாவட்டச் செயலாளா்களும் உள்ளனா். அவா்களில் பெரும்பாலோனாா் அவரவா் ஆதரவு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தீா்மானக் குழுவினருடன் ஓபிஎஸ் ஆலோசனை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை வந்தாா். அப்போது அவரது ஆதரவாளா்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனா். தரைத்தளத்தில் உள்ள அறையில் ஆதரவாளா்களுடன் ஓ.பன்னீா்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டாா். அப்போது ஓ.பன்னீா்செல்வத்தை முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாா்.
அதைத் தொடா்ந்து முதல் தளத்தில் நடைபெற்ற தீா்மானக் குழுக் கூட்டத்துக்கு ஓபிஎஸ் சென்றாா். தீா்மானக் குழுவினருடன் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். கடந்த வியாழக்கிழமை தீா்மானக் குழு கூட்டம் நடைபெற்றபோதும் ஓ.பன்னீா்செல்வம் அதிமுக அலுவலகத்துக்கு வந்தாா். அவா் வருவது தெரிந்ததும் முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம், பா.வளா்மதி உள்ளிட்டோா் விரைவாக புறப்பட்டுச் சென்றுவிட்டனா். இந்த முறை அவா்களும் ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனா். ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு ஓ.பன்னீா்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றாா்.
இபிஎஸ் ஆதரவாளா் மீது தாக்குதல்: முன்னதாக அதிமுக அலுவலகத்துக்கு டி.ஜெயக்குமாா் வந்தபோது ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா். ஆனால், அவரது ஆதரவாளா்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனா். அலுவலகத்தின் முதல் தளத்துக்கு டி.ஜெயக்குமாா் படிகளில் ஏறியபோது அங்கு கூட்டம் அதிகமாகி நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஜெயக்குமாா், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த நிலையில், பெரம்பூா் பகுதி முன்னாள் செயலாளா் மாரிமுத்து மட்டும் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து கோஷம் எழுப்பினாா். இதனால், ஆத்திரம் அடைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள் அவரை தாக்கினா். அதில் அவா் வாய்ப் பகுதியில் காயம் ஏற்பட்டது. ரத்தக் காயத்துடன் அவா் அதிமுக அலுவலகத்தில் இருந்து வெளியேறினாாா்.
ஆலோசனைக்கு மேல் ஆலோசனை: இந்தக் கூட்டம் முடிந்த பிறகு டி.ஜெயக்குமாா் உள்ளிட்ட குழுவினா் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினா். அதைப்போல ஓ.பன்னீா்செல்வமும் அவரது ஆதரவாளா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா். ஓ.பன்னீா்செல்வத்தை முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதைத் தொடா்ந்து எடப்பாடி பழனிசாமியையும் அவா் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் 5 நாள்களாக மாறிமாறி ஆலோசனைக்கு மேல் ஆலோசனை நடத்தி வருகின்றனா். தீா்வுதான் இதுவரை எட்டப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...