
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அதிமுக சார்பில் நேற்று இரவு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இணைக்க வலியுறுத்தி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியகுளத்தில் தங்கியிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று காலை சந்தித்துப் பேசினார்.
கைலாசபட்டியில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்திற்கு, அதிமுக மாவட்டச் செயலர் எம். சையதுகான் தலைமை வகித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அப்போது சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நிபந்தனையற்றப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கருத்தைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் வலியுறுத்தினர். பின்னர், இதே கருத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து, அதிமுக மாவட்டச் செயலாளர் எம். சையதுகான் கூறியதாவது: "அதிமுக பிளவுபட்டுள்ளதால் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் நிபந்தனையற்றப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
இந்தத் தீர்மானத்திற்கு மார்ச் 5-ம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, கட்சித் தலைமைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இதற்கிடையே, கோவையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை இணைத்து, அவர்களது தலைமையில் கட்சி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.