உக்ரைனிலிருந்த தமிழக மாணவர்கள் மொழிப் பிரச்னை உள்ளிட்ட பல சங்கடங்களை எதிர்கொண்டதாக திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போரை அடுத்து, அங்கு சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசும் சிறப்புக்குழு ஒன்றை அமைத்து தற்போதுவரை 1,800 தமிழக மாணவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளது. தமிழக மாணவர்களை மீட்க, தமிழக அரசு சார்பில் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜா ஆகியோர் அடங்கிய சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு அவர்கள் நேரடியாக உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று மாணவர்களை மீட்க வழிவகை செய்தனர்.
இவர்களுடன் தமிழ்நாடு கண்ணாடி இழை கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஏ.கே.கமல் கிஷோா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் இணை நிா்வாக இயக்குநா் எம்.பிரதீப் குமாா், எல்காட் நிா்வாக இயக்குநா் அஜய் யாதவ், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கோவிந்த ராவ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் சென்றனர்.
அந்தவகையில் உக்ரைனில் இருந்து கடைசியாக தமிழக மாணவர்கள் குழு இன்று சென்னை வந்தடைந்தது. தமிழகம் வந்த மாணவர்கள் குழுவை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அவர்களை நலம் விசாரித்து பயணம் குறித்து கேட்டறிந்தார். தமிழக சிறப்புக்குழுவுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.
உக்ரைனில் இருந்து இதுவரை தமிழக மாணவர்கள் 1,800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உக்ரைனிலிருந்து வந்த தமிழக மாணவர்களை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா,
'தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கூறியபோது அவர்கள் பணியை துரிதப்படுத்துகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், தமிழக மாணவர்கள் அங்கு பல சிரமங்களை சந்தித்துள்ளனர். மாணவர்கள் வந்து சொன்னபிறகு தான் இது தெரிந்தது. அதில் முதலாவது மொழிப் பிரச்னை ஒரு பெரிய காரணமாக இருந்தது.
இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளே இந்தியில் மட்டும் தான் பேசியுள்ளனர். மேலும், மீட்புப் பணியில் தென்னிந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் உடனடியாக அதிகாரிகளை அழைத்து 'ஆங்கிலத்தில் பேச வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
பின்னர் இரு நாள்கள் நேரம் கேட்டு அவ்வப்போது நடவடிக்கைகளை எனக்கு வாட்ஸ் ஆப்பிலும் தெரிவிவித்தார்.
தமிழகம் சார்பிலும் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து மாணவர்களை மீட்டு தில்லிக்கு அனுப்பி தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைத்து பின்னர் சென்னைக்கு அனுப்ப, சென்னையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை வரவேற்று போக்குவரத்து ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்பிய நிலையில் பெற்றோர்கள் பலரும் எங்களுக்கு தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தனர்.
ஆனால், சுமி பகுதியில் தமிழக மாணவர்கள் சிக்கிக்கொண்டது குறித்து முதல்வரும் கவலை அடைந்தார். சுமியில் பேருந்தில் ஏறிய பின்னர் மாணவர்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க சற்று கடினமாக இருந்தது. அவர்களை அங்கிருந்து மால்டோவா வரவழைத்து பின்னர் போலந்து மூலமாக தில்லி திரும்பியுள்ளனர்.
மாணவர்கள் இந்த வயதில் இப்படியான ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
இன்னும் தமிழக மாணவர்கள் சிலர் அங்கு இருக்கின்றனர். அவர்கள் 'எங்களுக்கு அச்சமில்லை, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நிலைமை சீராகும் என்று நம்புகிறோம்' என தெரிவித்ததால் அவர்களை வற்புறுத்தி அழைத்து வர முடியாது.
தமிழக மாணவர்கள் அனைவரும் தில்லி வந்தபிறகே நாங்களும் சென்னை திரும்பியுள்ளோம். எங்களது பணி வெற்றிகரமாக முடிந்தது.
உக்ரைனில் இருந்து திரும்பி வந்த தமிழக மாணவர்களின் கல்வி நிலை குறித்து முதல்வர் நல்ல முடிவெடுப்பார்' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | உக்ரைனை ரஷியா தாக்குவதன் உள்(ள)நோக்கம் என்ன? அலசல் ரிப்போர்ட்!