தமிழகத்தில் புத்தகப் பூங்கா அமைக்க நிலம் ஒதுக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் தமிழகத்தில் புத்தகப் பூங்கா அமைக்க நிலம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புத்தகப் பூங்கா அமைக்க நிலம் ஒதுக்கப்படும்: மு.க. ஸ்டாலின்
Published on
Updated on
3 min read


சென்னை: அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் தமிழகத்தில் புத்தகப் பூங்கா அமைக்க நிலம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

தமிழகத்தில் புத்தகப் பூங்கா அமைக்கப்பட்டால் அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் என அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கக் கூடிய வாய்ப்பு உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரையில்,

ஈராயிரம் ஆண்டு காலம் என்று இதுவரை நாம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது கிடைத்திருக்கக்கூடிய ஆய்வுகளின் படி பார்த்தால், மூவாயிரத்து ஐநூறு ஆண்டு பழமையும் - சிறப்பும் கொண்ட தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் பெருமை சேர்க்கக் கூடிய பெருமக்களின் பெயரால் அமைந்துள்ள விருதுகளை, அதே புகழும் பெயரும் அறிவும் ஆற்றலும் கொண்டிருக்கக்கூடிய பெருமக்கள் இங்கே பெற இருக்கிறார்கள்.

* தமிழனுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே அறத்தைப் போதித்த திருவள்ளுவர் பெயரிலான விருதை மு.மீனாட்சி சுந்தரனார் அவர்களுக்கும்
* பகுத்தறிவுப் பகலவன் - அறிவுலக ஆசான் தந்தைப் பெரியார் பெயரிலான விருதை - திராவிட இயக்கத்தின் கணினி என்று கருணாநிதியால் போற்றப்பட்ட எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்களுக்கும்
* ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்காம் டாக்டர் அம்பேத்கர் பெயரிலான விருதை - சட்ட நீதியை மட்டுமல்ல, சமூக நீதியையும் வழங்கும் தீர்ப்புகளைத் தந்த நீதிபதி சந்துரு அவர்களுக்கும்
* நாமணக்கும் பேச்சால் தமிழர் உள்ளமெல்லாம் இன்றும் மணம் தந்து வரும் பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதை நாவுக்கரசர் - திராவிட இயக்கத்தின் போர்முரசமாம் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும்
* கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் பெயரிலான விருதை நம்முடைய பெருமதிப்பிற்குக்குரிய இலக்கியச் செல்வர் குமரி ஆனந்தன் அவர்களுக்கும்
* பாட்டுத் திறத்தால் இவ்வையகத்தை அசரவைத்த மகாகவி பாரதி பெயரிலான விருதை - தனது பேச்சுத் திறத்தால் தமிழ்நாட்டு மேடைகளை அசர வைத்துக் கொண்டிருக்கக்கூடிய பாரதி கிருஷ்ணக்குமார் அவர்களுக்கும்
* வார்த்தைகளால் தமிழுக்கு வாளாக அமைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெயரிலான விருதை திராவிடப் புலவர் செந்தலை கவுதமன் அவர்களுக்கும்
* முத்தமிழால் மூவாத்தமிழுக்கு அணி சேர்த்த கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களுடைய பெயரிலான விருதை முன்னாள் துணை வேந்தரும் எந்நாளும் தமிழாய்வு வேந்தருமான மா.ராசேந்திரன் அவர்களுக்கும்
* கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெயரிலான விருதை - பட்டிமன்ற வாதத்தினுடைய சக்ரவர்த்தியான பாரதி பாஸ்கர் அவர்களுக்கும்
* சொல்லின் செல்வர் பெயரிலான விருதை ஒவ்வொரு சொல்லையும் கல் போல எடுத்து வீசக்கூடிய சூரியா சேவியர் அவர்களுக்கும்
* எங்கோ பிறந்து இங்கு பிறந்த தமிழனாகவே வாழ்ந்த ஜி.யு.போப் பெயரிலான விருதை இதழியல் துறையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் அ.சு.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்
* சீறாபுராணம் மூலம் தமிழை உயர்வித்த உமறுப்புலவர் பெயரிலான விருதை தமிழிசை வளர்ச்சிக்கு நாளும் தொண்டாற்றும் மதுரை நா.மம்முது அவர்களுக்கும்
* தமிழ்த் தேசிய காப்பியத்தின் மூலமாக தமிழினத்தின் பெருமையை நிலைநாட்டிய இளங்கோவடிகள் பெயரிலான விருதை, மேடையில் ஏறினால் எல்லாக் காப்பியங்களையும் கரைமடை திறந்தது போல ஒப்பிக்கும் நெல்லை கண்ணன் அவர்களுக்கும்
* 20 மொழிகளை அறிந்து, அன்னைத்தமிழே அனைத்துக்கும் தாய் என்று சொன்ன திராவிட மொழிநூல் ஞாயிறு பாவாணர் பெயரிலான விருதைப் பெறும் தகுதியை தனது ஆய்வுத் திறத்தால் பெற்ற முனைவர் கு.அரசேந்திரன் அவர்களுக்கும்  
*பொதுவுடமைக் கொள்கையை திசை எட்டும் சேர்த்த சிங்காரவேலர் பெயரிலான விருதை - தினந்தோறும் தீக்கதிர் மூலமாக அதே பணியைச் செய்து வரும் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுக்கும்
* தமிழின இயக்கமாம் திராவிட இயக்கம் உருவாகும் போதே தனித்தமிழுக்காக இயக்கம் கண்ட தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் பெயரிலான விருதை சமயமும் தமிழுமாய் சுகித்து வாழக்கூடிய சுகி சிவம் அவர்களுக்கும்

* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெயரிலான விருதை அதே நோக்கம் கொண்ட முனைவர் இரா.சஞ்சீவிராயர் அவர்களுக்கும் -
* முந்தைய நூற்றாண்டிலேயே தமிழன் - திராவிடன் என்ற இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் பதிய வைத்த அயோத்திதாசப் பண்டிதர் பெயரிலான விருதை, அயோத்திதாசர் எழுத்துக்களை பெருமளவில் வெளி உலகுக்கு எடுத்து வந்தவரும், அரசியல் ஆய்வாளர்களில் தலைசிறந்தவர்களுள் ஒருவரான ஞான அலாய்சிஸ் அவர்களுக்கும்
* முதலமைச்சர் கணினித் தமிழ் விருதை கணினியில் முனைப்பாகச் செயல்படும் முனைவர் தனலட்சுமி அவர்களுக்கும்
* பாமரர்களையும் செய்தித்தாள் படிக்க வைத்த சி.பா.ஆதித்தனார் பெயரிலான விருதை படித்தவர்களுக்கும் புதிய சிந்தனைகளை உருவாக்கி வரும் உயிர்மை இதழுக்கும்
* தமிழ்த்தாய் பெயரிலான விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கும்  வழங்குவதை தமிழ்நாடு அரசு பெருமையாகக் கருதுகிறது.

உங்களுக்கு வழங்கியதன் மூலமாக இந்த விருது பெருமை அடைகிறது. எனது கையால் வழங்கியதன் மூலமாக நானும் பெருமைப்படுகிறேன். உங்களுக்கு விருதுகளை வழங்கியதன் மூலமாக நான் எனது தமிழ்க் கடமையைச் சரியாகச் செய்து விட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.


யாருடைய பெயரால் விருதுகள் உள்ளதோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தகைய அங்கீகாரத்தை பெறத் தவறினார்களோ - அது போன்ற சூழல் இனி வருங்காலத்தில் இருக்கக் கூடாது என்பதை இன்றைய தமிழக அரசு தனது கொள்கையாக வைத்துள்ளது என்பதை இந்த மாபெரும் நிகழ்ச்சியின் மூலமாகத் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க நான் சென்றபோது ஒரு அறிவிப்பைச் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், அது தேர்தல் காலம். உள்ளாட்சி அமைப்புனுடைய தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம். அதனை அந்த நேரத்தில் சொல்ல முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அதற்கு இடம் தரவில்லை. தேர்தல் முடிந்துவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அந்த அறிவிப்பைச் செய்கிறேன்.

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கலாம் என்றும் - அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் கருணாநிதி ஒருமுறை சொன்னார். அதற்கு புத்தகப் பூங்கா என்றும் அவரே பெயர் சூட்டினார்.
பாபசி அமைப்பைச் சார்ந்திருக்கக்கூடிய அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று அதற்கான நிலத்தைத் தேர்வு செய்து, அரசு வழங்கும் என்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் உறுதி அளிக்கிறேன். இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம்,  அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய சூழல் நிச்சயம் உருவாகும். அதனை உருவாக்கித் தர அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் உறுதியாகச் செய்யும் என்று ஸ்டாலின் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com