தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் வசதியினைக் கருத்தில் கொண்டு, முன்பிருந்ததுபோல் சென்னையிலிருந்து அவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
2022-ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாக சென்னை விமான நிலையத்தை அனுமதிக்க வேண்டுமென்று கோரி பிரதமருக்கு 11-11-2021 ஆம் நாளன்று எழுதியுள்ள கடிதத்தின் மீது, மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கவனத்தை ஈர்க்க விழைவதாகக் குறிப்பிட்டு, ஒவ்வோராண்டும் தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் 4,000-க்கும் மேற்பட்டோர், சென்னையிலிருந்து சௌதி அரேபியாவிற்கு தங்களது பயணத்தைத் தொடங்குகின்றனர் என்றும், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் பயனடையும் வகையில் சென்னையில் இருந்து ஜெட்டாவிற்கும், அங்கிருந்து திரும்பி வருவதற்கும், 1987 ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை நேரடி ஹஜ் விமானங்கள் இயக்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.