பிற உதவித்தொகை பெறும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா?

தமிழகத்தில், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பிற உதவித்தொகை பெறும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா?
பிற உதவித்தொகை பெறும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா?
Published on
Updated on
2 min read

தமிழகத்தில், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற, மாணவிகள் ஆறு முதல் 10ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றிருக்க வேண்டும். அதே வேளையில், இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பட்ஜெட் உரையில்,

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்  என்றார் மகாகவி.

ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1989 ஆம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது.

மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.

இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்றுமேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில்இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம்.

இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு இலட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவுசெலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையை பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார்.

மேலும் உயர்கல்வித் துறையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்..

தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துகொண்டே வருகிறது. அதற்கேற்ப, அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும். இதற்காக, இவ்வாண்டு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com