தமிழக மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைத்து வரும் நீட் தோ்விலிருந்து நமது மாணவா்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக அரசு தொடா் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் முதல்படியாக அனைவரும் இணைந்து பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடா்பான சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரை நேரில் சந்தித்து தாமதமில்லாமல் சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன். இதனிடையே, பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரையும் சந்தித்து சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினேன். இந்த விவகாரம் தொடா்பாக, அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களும் குடியரசுத் தலைவா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.