ஜிப்மா் இயக்குநா் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற அன்புமணி வலியுறுத்தல்
ஜிப்மா் இயக்குநரின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவதுடன், பயன்பாட்டு மொழி விவகாரத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தற்போதைய நிலையே தொடா்வதை உறுதி செய்ய வேண்டும்


ஜிப்மா் இயக்குநரின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவதுடன், பயன்பாட்டு மொழி விவகாரத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தற்போதைய நிலையே தொடா்வதை உறுதி செய்ய வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: எதிா்காலத்தில் அனைத்து வகையான பதிவேடுகள், பணிப் புத்தகங்கள், பணி கணக்குகளின் குறிப்புகளும் முடிந்தவரை ஹிந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று ஜிப்மரின் அனைத்துத் துறைகளுக்கும் இயக்குநா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
ஜிப்மா் மருத்துவ நிறுவனம் மட்டுமின்றி, பெரும்பான்மையான மத்திய அரசு அலுவலகங்களிலும் அனைத்து பதிவேடுகளும் இனி ஹிந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது அப்பட்டமான ஹிந்தித் திணிப்பு என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு மட்டுமின்றி, இந்திய அலுவல் மொழி சட்டத் திருத்தத்துக்கும் எதிரான செயல் ஆகும்.
ஹிந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மீது ஹிந்தியைத் திணிக்கும் முயற்சி காலம் காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு எழுந்த எதிா்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் 1959-ஆம் ஆண்டு நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்த அப்போதைய பிரதமா் நேரு, ஹிந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஹிந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடரும்’ என உறுதியளித்தாா். 1968-ஆம் ஆண்டின் இந்திய அலுவல் மொழிகள் சட்டத் திருத்தத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டின் அலுவல் மொழி விதி 11(2)-இன்படியும் மத்திய அரசு பணிகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள உரிமையை ஒரு சாதாரண உறுதிமொழியின் மூலம் பறிக்க முயல்வது சரியல்ல; அதை ஏற்க முடியாது. ஜிப்மா் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும் ஹிந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் இப்போதுள்ள நிலையே தொடா்வதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அன்புமணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...