சந்திர கிரகணம்: நடை சாத்தப்படும் கோயில்களும் திறந்திருக்கும் கோயில்களும்

இன்று சந்திர கிரகணம் என்பதால், திருத்தணி உள்ளிட்ட சில கோயில்களைத் தவிர்த்து பெரும்பாலான கோயில்களின் நடை சாத்தப்படுகிறது.
சந்திர கிரகணம்: நடை சாத்தப்படும் கோயில்களும் திறந்திருக்கும் கோயில்களும்


இன்று சந்திர கிரகணம் என்பதால், திருத்தணி உள்ளிட்ட சில கோயில்களைத் தவிர்த்து பெரும்பாலான கோயில்களின் நடை சாத்தப்படுகிறது.

முழு சந்திர கிரகண நிகழ்வு செவ்வாய்க்கிழமை நிகழ உள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இந்த நிகழ்வைக் காண முடியும்.

இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் காண இயலாது. முழுமையான மற்றும் பகுதி அளவு சந்திர கிரகணத்தின் நிலைகளை கொல்கத்தா, குவாஹாட்டி, கோஹிமா, அகா்தலா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து காணலாம். சந்திர கிரகணத்தின் பிற்பகுதி நிலைகள் மற்றும் முடிவு மட்டுமே நாட்டின் பிற பகுதிகளில் இருந்து காணக் கூடியதாக இருக்கும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி, 5.12 மணி வரை இருக்கும். பின்னா், பகுதி அளவு சந்திரகிரகணம் 6.19 மணியளவிலும் முடிவடைகிறது.

நாகாலாந்தின் கோஹிமாவில் மட்டுமே சந்திர கிரகணத்தின் உச்சநிலையை மாலை 4.29 மணியளவில் காணலாம். தமிழகத்தில் சென்னையில், மாலை 5.39 மணியளவில் சந்திர கிரகணத்தைக் காண இயலும்.

கோயில் நடை சாத்தப்படும் விவரம்

சந்திர கிரகணத்தையொட்டி கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் வரும் 8-11-2022 (செவ்வாய்க் கிழமை) அன்று  பிற்பகல் 2 மணி முதல் நடை சாத்தப்படுகிறது. மீண்டும் அடுத்த நாள் 9-11-2022 காலை 6 மணி முதல் வழக்கம் போல் நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் செவ்வாய்க்கிழமை (நவ.8) மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும். மீண்டும் புதன்கிழமை (நவ.9) காலை 8 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் அடுத்த சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் நடை வரும் 8-ஆம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி, நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். 12 மணிக்கு மேல் கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் வரும் 8-11-2022 (செவ்வாய்க் கிழமை) அன்று  பிற்பகல் 2 மணி முதல் நடை சாத்தப்படுகிறது. மீண்டும் அடுத்த நாள் 9-11-2022 காலை 6 மணி முதல் வழக்கம் போல் நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சூரியகிரகணம் மற்றும் சந்திர கிரகணங்களின்போது கோயில்களில் ஆகம விதிகளின் படி நடை சாத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் சந்திரகிரகணம் செவ்வாய்க்கிழமை ஏற்படுகிறது. இதையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் 22 உபகோயில்களில் செவ்வாய்க்கிழமை நடை அடைக்கப்படுகிறது. சந்திர கிரகணம் பிற்பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 5.19 மணிக்கு முடிவடைவதால், மீனாட்சியம்மன் கோயிலில் காலை 7 மணிக்கு மேல் அன்னாபிஷேகம் நடைபெற்று, காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அம்மன்- சுவாமி மூலஸ்தானத்தில் கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும். இந்த நேரத்தில் பக்தா்கள் தரிசனம் செய்யவோ, அா்ச்சளை செய்யவோ அனுமதி இல்லை. இரவு 7 மணிக்கு அா்த்த ஜாம பூஜை நடைபெற்று 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்படும். இது குறித்து கோயில் வளாகத்தில் அறிவிப்புப் பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள அனைத்து சன்னிதிகளும் பிற்பகல் 2.30 மணியளவில் திருக்காப்பிடப்படுகின்றன. சந்திரகிரகணம் முடிவடைந்ததும் இரவு 7 மணிக்கு வழக்கம்போல் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள். மேல் சம்ரோட்சன பூஜை நடைபெற்ற பின்பு சாயரட்சை பூஜையும், தங்க ரத புறப்பாடும், இராக்கால பூஜையும் நடைபெறும். இதே நடைமுறை கோயிலின் உப கோயில்களிலும் கடைப்பிடிக்கப்படும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னிமலை முருகன் கோயிலின் நடை நம்பவா் 8ஆம் தேதி பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை அடைக்கப்படவுள்ளது.

திருப்பதி

முழு நேர சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் திருப்பதி கோயில் நடை மூடப்படுவதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களும் நவ.8-ஆம் தேதி மூடப்பட உள்ளது. பக்தா்கள் இதைக் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

திறந்திருக்கும் கோயில்கள்

திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (நவ.8) சந்திர கிரகணம் நடைபெறும் நேரத்திலும் நடை திறந்திருக்கும் என்பதால், பக்தா்கள் தொடா்ந்து சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு வழக்கமாக அனைத்து கோயில்களும் மூடப்படுவது வழக்கம். ஆனால் திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் நடை மட்டும் அன்றைய தினம் திறக்கப்பட்டு, தியாகராஜசுவாமிக்கு மகா அபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com