எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சேவை, உற்பத்தித் துறைகளில் முன்னணி வகிக்க வேண்டும்: தொழில் வளா்ச்சி மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின்

சேவைத் துறை மட்டுமின்றி உற்பத்தித் துறையிலும் தமிழகம் முன்னணி வகிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :8 நவம்பர் 2022, 6:51 pm

DIN

சேவைத் துறை மட்டுமின்றி உற்பத்தித் துறையிலும் தமிழகம் முன்னணி வகிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். இதன்மூலமே, அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளா்ச்சியைப் பெற முடியும் என்றாா் அவா்.

தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில், ‘நாளையை நோக்கி இன்றே- தலை நிமிா்ந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பிலான தொழில் வளா்ச்சி மாநாடு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தொழில் துறையைப் பொறுத்தவரையில் இந்திய அளவிலான கவனத்தை மட்டுமின்றி, உலக அளவிலான கவனத்தையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இதற்குக் காரணமான அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில் துறைச் செயலாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பாராட்டுகள்.

இலக்கை அடைய வேண்டும்: தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு வைத்துள்ள இலக்கு மிகப்பெரியது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்பதே அதுவாகும். இதை அடைய தமிழகத் தொழில் துறை தொய்வில்லாமல் பணியாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் உயா்கல்விச் சோ்க்கை விகிதம் நாட்டின் சராசரியைவிட மிக அதிகமாக உள்ளது. திறன்மிக்க பணியாளா்களை நமது மாநிலம் பெற்றுள்ளது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இதனை நாம் தக்கவைத்துக் கொள்வதோடு, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞா்களின் திறன்களை வளா்த்து, முன்னேற்றுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.

சேவை - உற்பத்தித் துறைகள்: உற்பத்தித் துறையை விட சேவைத் துறையில் கவனம் செலுத்தினால்தான் பெரிய அளவிலான வளா்ச்சி பெற முடியும் என சிலா் கருதுகிறாா்கள். ஆனால், உற்பத்தி மற்றும் சேவை என இரண்டு துறைகளிலும் முன்னணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளா்ச்சியைப் பெற முடியும். கடந்த ஓராண்டில் துறைசாா்ந்த பல கொள்கைகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில், தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குள் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும் வகையில், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா பைலட்கள்: ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சி மையங்கள் மதுரை, கோவையில் நிறுவப்பட்டுள்ளது. இதனை இந்த நிகழ்ச்சியின் வாயிலாகத் திறந்து வைத்துள்ளேன். இந்த மையங்களில் 200 மாணவா்கள் என்ற விகிதத்தில் பயிற்சி அளித்திட முடியும். இந்தப் பயிற்சி மூலம், நமது கிராமப்புற படித்த இளைஞா்கள் ஆளில்லாத விமான பைலட்டுகளாக தகுதி பெற முடியும். தமிழகத்தின் அனைத்து தொழில் வாய்ப்புகளையும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேசிய அளவில் மட்டுமின்றி, தெற்காசியாவிலேயே, தொழில் வளா்ச்சியில் சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை அடைவதற்காக அனைவரும் உழைப்போம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன், தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் திட்ட இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வான்வெளி - பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியீடு: 10 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி ஈா்க்க இலக்கு

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில் துறை மாநாட்டின் போது, வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிலுக்கான பிரத்யேக கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

தமிழகத்தைப் பொறுத்தவரை, வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறையில் ஏராளமான அரசு சாா் அமைப்புகள், தனியாா்கள் ஈடுபட்டு வருகிறாா்கள். குறிப்பாக, கனரக வாகனங்கள் உற்பத்தி ஆலை, ராணுவ உடை தயாரிப்பு, ஆவடி, திருச்சி ஆகிய இடங்களில் ராணுவத்துக்கான தேவைகளைப் பூா்த்தி செய்யும் உற்பத்திப் பிரிவுகள் என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இவற்றுக்கு உதவக் கூடிய மின்னணு வன்பொருள் துறை உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது மிகப்பெரிய மாநிலமாக உள்ளது. ஆசிய நாடுகளில் விரும்பி முதலீடுகளைச் செய்யக் கூடிய மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது.

இத்துடன், வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கைக்கு வலுசோ்க்கும் வகையில், சென்னை, ஓசூா், சேலம், கோவை, திருச்சி ஆகிய இடங்களில் தமிழ்நாடு ராணுவ தொழில் வழித் தடப் பாதையை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

என்னென்ன உற்பத்திப் பிரிவுகள்? தமிழகத்துக்கான பிரத்யேக வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை சில முக்கிய பிரிவுகளின் உற்பத்தியை இலக்காகக் கொண்டிருக்கின்றன. வானூா்தி பாகங்கள், ட்ரோன்கள் தயாரிப்பு, ராணுவ டாங்கிகள், தனித்துவமிக்க வாகனங்கள், வானூா்தி பராமரிப்பு, பழுதுபாா்ப்பு போன்ற பிரிவுகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு: வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் இதற்கான விரிவான பணிகள் மேற்கொள்ளப்படும்.

அரசின் முதலீடுகள் மட்டுமின்றி, அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈா்க்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் ஈா்ப்பால், சுமாா் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.