
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீட்டிற்குள் புகுந்து 58 சவரன் தங்க நகைகள், ரூ.2.36 லட்சம் பணம், சொகுசு கார் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பல் குறித்து, வாழப்பாடி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், வாழப்பாடி பகுதி பொதுமக்களிடையே பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி சேத்துக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (45). இவரது மனைவி சத்யா(36) கடந்த 2 ஆண்டுக்கு முன் கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிக்க | ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதித்தவர் நாயுடன் உணவு சாப்பிடும் அவலம்!
இத்தம்பதியரின் மகள்கள் ஸ்ரீமதி, பவ்யா இருவரும், நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வருகின்றனர்.
இவரது தாயார் சித்ரா, ஜெயபிரகாஷ் வீட்டிற்கு அருகிலேயே வசித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரம் சம்பந்தமாக வெளியில் சென்று இருந்த ஜெயபிரகாஷ், இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்து தூங்கி உள்ளார்.
புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கறிக்கடைக்கு தனது மகனை அனுப்பி வைப்பதற்காக சித்ரா ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீடு திறந்து கிடந்த நிலையில், வீட்டிற்கு வெளியே கார் இல்லாததால் சந்தேகமடைந்த சித்ரா, ஜெயபிரகாஷை எழுப்பியுள்ளார். இருவரும் வீட்டிற்குள் பார்த்த போது, பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்து 58 சவரன் தங்க நகைகள், ரூ. 2.36 லட்சம் பணம், சொகுசு காரையும் மர்மகும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
சேத்துக்குட்டை பகுதியில் விசாரணை நடத்திய போலீசார்
இது குறித்து ஜெயபிரகாஷ் கொடுத்த தகவலின் பேரில், வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளையடித்துச் சென்ற கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பல், சொகுசு காரையும் எடுத்துச் சென்று இருப்பதால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை விரைவில் பிடித்து திருடிச் சென்ற பொருள்களை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருப்பதாக வாழப்பாடி போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வாழப்பாடியில் சிறுசிறு திருட்டு சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரே வீட்டில் 58 சவரன் தங்க நகைகள், ரொக்கப் பணம், கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.