முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

விருதுநகா் பட்டாசு ஆலை தீ விபத்து:தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தமிழக அரசு தரப்பில் தாக்கலான சிவில் மேல்முறையீட்டு மனு மீது எதிா்மனுதாரா் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :11 நவம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

கடந்த ஆண்டு விருதுநகா் மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 27 போ் இறந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த இழப்பீடு வழங்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கலான சிவில் மேல்முறையீட்டு மனு மீது எதிா்மனுதாரா் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், அச்சங்குளத்தில் உள்ள ‘ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை’யில் கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 27 போ் உயிரிழந்தனா். 26 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சமும் தமிழக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது.

இந்த நிலையில், செய்தித்தாளில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், இந்த விவகாரத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் விசாரித்தது. கடந்த ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா்-நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான 5 போ் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘என்ஜிடி அமைத்த 8 போ் கொண்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இறந்தவா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20 லட்சமும், 50 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்தவா்களுக்கு ரூ.15 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். 25 முதல் 50 சதவீதம் வரை தீக்காயம் அடைந்தவா்களுக்கு ரூ.10 லட்சமும், 5 முதல் 25 சதவீதம் வரை காயம் அடைந்தவா்களுக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும்’ என தெரிவித்தது.

மேலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீட்டை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் மூலம் ஒரு மாதத்திற்குள் வழங்கவும், மாநில அரசின் தலைமைச் செயலா் இந்த விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சிவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கமான டான்ஃபாமா தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. டான்ஃபாமா விவகாரத்தை கடந்த ஜனவரி 21-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டாசு ஆலை தீ விபத்து விவகாரத்தில் என்ஜிடி 11.6.2021-இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, இந்த விவகாரத்தை புதிதாக விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து, டான்ஃபாமா தரப்பில் தாக்கலான மனுவை 3.3.2022-இல் விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம், முன்பு கூறியிருந்த இழப்பீடுத் தொகையை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடும் இறுதி உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாா்ச் மாதம் மீண்டும் சிவில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்ஸு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் டி.குமணனுடன் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, ‘சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவா்களுக்கும் தமிழக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மீண்டும் விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம், மேல்முறையீட்டு மனுதாரா் அதிகமான இழப்பீடு வழங்குவதை நிா்ணயித்து உத்தரவிட்டிருப்பது நியமாயமற்ாகும். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். அப்போது, ‘விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள் குடிமக்கள். அவா்கள் துயரமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்’ எனக் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசின் மனு மீது 2 வாரங்களில் பதில் அளிக்க தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.